வன்னி நிலவரத்தால் பிரிந்த குடும்பத்தினரை மீண்டும் ஒன்று சேர்க்க ஜனாதிபதியை கோருகிறார்: ஆனந்தசங்கரி
வன்னியில் விடுதலைப் புலிகளிடமிருந்து உயிரை பணயம் வைத்து தப்பி ஓடி வவுனியா பிரதேசத்துக்குள் வந்துள்ள இடம் பெயர்ந்த மக்களைப் பற்றிய அறிய மிக ஆவலாக அவர்களின் உறவினர்கள் பிற நாடுகளிலிருந்து பல தொலைபேசி அழைப்புக்கள் நேற்றும் இன்றும் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்பதையும், அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதையும் அறிய விரும்புகின்றனர்.
அப்பாவி மக்களை விடுவிக்குமாறு சர்வதேச அமைப்புக்களாகிய ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுத் தலைமை நாடுகள் மற்றும் அமெரிக்கா கனடா பிரித்தானியா இந்தியா போன்ற நாடுகளும் விடுதலைப் புலிகளை வேண்டியுள்ளன. தமிழ்நாடோ தமிழ் தேசிய கூட்டணியினரோ விடுதலைப் புலிகளிடம் இத்தகைய வேண்டுகோள்களை விடுக்காதது துர்திஸ்டமே. அதைவிடுத்து அவர்கள் இன்றும் வெளியிட்டுள்ள முட்டாள்தனமான அறிக்கை அதிர்ச்சியைத் தருகிறது.
நான் தங்களிடம் மூன்று கோரிக்கைகளை விடுக்க விரும்புகிறேன். முதலாவதாக யார் யார் இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ளார்களோ அவர்களின் பெயர் விபரம், தற்போது தங்க வைக்கப்பட்டள்ள இடம் போன்ற விபரம் அடங்கிய பட்டியலை வெளியிட வேண்டும். அது அவர்களின் உறவினர்களின் பதட்டத்தையும், அச்சத்தையும் போக்குவதுடன் அவர்களுக்கு வேண்டிய சில தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும்.
இரண்டாவதாக வந்துள்ளவர்களில் முதியோர், சிறு பிள்ளைகள், நோய்வாய்ப்பட்டுள்ளோரை வவுனியாவில் உள்ள அவர்களின் உறவினர்கள் ஏற்பார்களேயானால் அவர்களை அனுமதிப்பதோடு எஞ்சியவர்களை உரிய விசாரணையின் பின் அவர்களின் பெற்றோரிடம் கையளிக்கலாம். எனது வேண்டுகோள்களுக்கு ஆதரவாக இரு சம்பவங்களை குறிப்பிட விரும்புகின்றேன். எனக்குத் தெரிந்த கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் இரு கால்களும் அற்ற நிலையில் மன்னார் வைத்தியசாலையில் நினைவிழந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் குடும்பத்தினர் பற்றிய செய்தி எதுவும் தெரியாத நிலை உறவினரை தேடித் தருமாறு என்னைத் தொந்தரவு செய்கின்றனர். மற்றுமோர் சம்பவத்தில் ஓர் பெண்மணி ஒரு காலில் படுகாயப்பட்டு அவரின் தாயார் அவரை மன்னார் வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கின்றார். மறுநாள் வவுனியா வந்த அவர் கணவர் வவுனியா வைத்தியசாலையில் தன் மகன் ஒருவரை பராமரிக்கின்றார். இவர்களை அவர்களின் உறவுக்காரர்கள் அவர்களை தம்முடன் தம் வீட்டில் வைத்திருக்க சம்மதம் தெரிவிக்கின்றனர்.
எனது மூன்றாவது வேண்டுகோள் உள்ளுர் பொது அமைப்புக்கள், அரசியற்கட்சிகள், கிராம முன்னேற்ற சங்கங்கள், சனசமூக நிலையங்களைச் சேர்ந்தவர்களை அகதிகள் சந்தித்து உதவ அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அனுமதிப்பதால் விடுதலைப் புலிகள் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அவர்களின் பொய்ப்பிரச்சாரம் இளைஞர்களை மற்றவர் அறியாத இடத்துக்கு மாற்றப்படுவதாகவும், பெண்கள் காணாமல் போகிறார்கள் என்றும் பொது மக்கள் சிறைக்கைதிகள் போல் நடத்தப்படுகிறார்கள் என்றும் வழங்கப்படும் உணவின் தரம் மிகக் குறைவாக இருப்பதாகவும் இதுபோன்ற இன்னும் பலவாகும். நாளுக்குநாள் முகாமுக்குள் வந்து சேரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இத்தகைய தொண்டர்களின் உதவி மிக பிரயோசனமானதாக இருக்கும்
நன்றி
வீ. ஆனந்தசங்கரி
தலைவர் – த.வி.கூ
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply