முல்லைத்தீவிலிருந்து மேலும் பல நோயாளர்களை அழைத்து வர ஐசிஆர்சி நடவடிக்கை எடுத்துள்ளது

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் இடம்பெயர்ந்து செயற்பட்டு வரும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலும் பல நோயாளர்களைத் திருகோணமலைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர் சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

அங்குள்ள படுகாயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களை அழைத்து வருவதற்கான கப்பல் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுமாத்தளன் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களை ஏற்றிச் செல்வதற்காகசர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த கப்பல் இன்று நண்பகலளவில் அங்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் , படுகாயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்கள் உட்பட 300 பேர் இந்தக் கப்பலில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி முக்கிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில் :

“வன்னியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களில் சுகாதாரத்துறையைச் சேர்ந்த 3 பணியாளர்களும் பலியாகியிருக்கின்றனர். பல ஊழியர்கள் தாக்குதல் அச்சம் காரணமாக வைத்தியசாலைகளில் கடமைக்கு சமூகமளிக்கவில்லை. எனினும் , மோசமாகக் காயமடைந்து வருபவர்களுக்கும், ஏனைய நோயாளர்களுக்குமான வைத்திய சேவைகளை நாமே தொடர்ந்து வழங்கி வருகின்றோம்.

நாளாந்தம் 60 பேர் வரையில் காயமடைந்து வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர். இவர்களுக்கு முக்கியமாக வழங்கப்பட வேண்டிய நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் உட்பட முக்கிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தப் பற்றாக்குறை நீக்கப்படுவதுடன், காயமடைந்த பலரது உயிர்களைக் காப்பதற்காக வைத்தியசேவைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்” என்றார் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply