ஐ.நா. அமைதிகாக்கும் குழுவை இலங்கைக்கு அனுப்பவேண்டும் : றொபேர்ட் இவான்ஸ்
இலங்கையில் தமிழ் மக்களின் அழிவைத் தவிர்ப்பதற்கு ஐ.நா. அமைதிகாக்கும் குழுவை அனுப்புமாறு கோருவதற்கான வேளை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துள்ளதாக தெற்காசியாவுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் றொபேர்ட் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்ற தலைப்பில் றொபேர்ட் இவான்ஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
அதில் றொபேர்ட் இவான்ஸ் தெரிவித்திருப்பதாவது:-
இலங்கையில் இரு தரப்பினராலும் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தம் ஒன்று உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எவ்வாறாயினும் பொது மக்கள் குருதிப் பெருக்கைத் தவிர்ப்பதற்கு நாட்டுக்குள் ஐ.நா. அமைதிகாக்கும் குழுவை அனுமதிக்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்துவதற்கான வேளை வந்துள்ளதாக நான் நம்புகின்றேன்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலுள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருப்பதாக நாட்டிலிருந்து வெளியாகும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தனது பக்கத்திற்கு வருமாறு இலங்கை அரசு தமிழ் மக்களை வலியுறுத்தியுள்ளது. ஆனால் அவ்வாறு வருவது தொடர்பான இயற்கையான தயக்கமும், அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளன. இதற்குச் சமாந்தரமாக தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் மக்கள் தப்பிச்செல்ல முயற்சித்தால் புலிகள் அவர்களைச் சுட்டு விடுவார்கள் என்பது தொடர்பான செய்திகளும் உள்ளன.
தமிழ் மக்கள் அதிகளவுக்கு இழப்புக்களையும் அழிவுகளையும் எதிர்கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. இலங்கைப் படையினர் மற்றும் அவர்களின் முகாம்கள் தொடர்பாக அவர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் வித்தியாசமான மொழி குறித்துக் குறிப்பிடத் தேவையில்லை. சர்வதேச சமூகம் உடனடியாகச் செயற்படாவிடின் சுமார் 250,000 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பேரனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.
மேலதிகமாக ஐ.நா.வும், சர்வதேச சமூகமும் இந்த மக்களுக்கு மனிதாபிமான உதவி சென்றடைவதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துமாறு நான் அழைப்பு விடுகின்றேன். அத்துடன் சர்வதேச பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் செல்வதற்கு முழுஅளவில் அனுமதி வழங்க வேண்டும். காலம் கைநழுவிச் சென்று கொண்டிருக்கிறது. முன்னுரிமை கொடுத்து இந்த உதவியை மேற்கொள்ள வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply