வன்னியிலிருந்து வந்தவர்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி 12 பேர் காயம்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கைக்குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்திருப்பதாக வவுனியாப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  
 இடம்பெயர்ந்த மக்களை ஏற்றுக்கொண்டுவந்த பேரூந்து மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், மாங்குளத்திற்கும், புளியங்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நள்ளிரவு பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக வவுனியாப் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதேநேரம், காயமடைந்தவர்கள் இன்று சனிக்கிழமை அதிகாலை 3-4 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வன்னியில் தொடர்ந்துவரும் மோதல்களால் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி மாலை வரை வன்னியிலிருந்து வவுனியாவுக்கு 28,196 பேர் வந்திருப்பதாக வவுனியா அரசாங்க செயலக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறு வந்த பொதுமக்கள் 12 இடங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், 1351 பேர் செட்டிக்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கதிர்காமர் கிரமா வீட்டுத் திட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மனிக்பாம் பாடசாலையில் 188 குடும்பங்களினை சேர்ந்த 582 பேரும், செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் 512 குடும்பங்களினை சேர்ந்த 1623 பேரும், பூந்தோட்டம் கல்வியல் கல்லூரியில் 4406 பேரும், பம்பைமடு பல்கலை கழகத்தில் 2800 பேரும்,
நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரியில் 2375 பேரும்,  நெளுக்குளம் கலைமகள் பாடசாலையில் 2844 பேரும், பட்டானிச்சூர் மகாவித்தியாலயத்தில் 1333 பேரும், கோவில்குளம் இந்துக் கல்லூரியில் 1066 பேரும், காமினி மகாவித்தியாலயத்தில் 1547 பேரும், பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் 1889 பேரும், வவுனியா மத்திய மகாவித்தியாலயத்தில் 6380 பேரும் தங்கவைக்கப்பட்டிருப்பதாக அரசாங்க செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply