இடம்பெயர்ந்த மக்கள் பற்றி மன்னார் மற்றும் யாழ் ஆயர்கள் அக்கறை
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருந்த மக்களுக்கு உதவுவது தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தலைஇமையிலான கிறிஸ்தவ மதகுருமார்கள் குழுவொன்று வன்னி இராணுவக் கட்டளைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதகுருமார்கள், வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜெகத் ஜெயசூரியவைச் சந்தித்து, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் மன்னாரில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் பற்றிக் கேட்டறிந்துகொண்டனர்.
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுகாதார, மருத்துவ மற்றும் ஏனைய சேவைகள் குறித்தும், இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் கற்றல் வசதிகள் பற்றியும் இராணுவக் கட்டளைத் தளபதி, மன்னார் ஆயர் தலைமையிலான குழுவினருக்கு விளக்கிக் கூறியுள்ளார்.
பொதுமக்களின் நலன்குறிந்து விசாரித்தமையைப் பாராட்டிய வன்னி இராணுவக் கட்டளைத் தளபதி, இடம்பெயர்ந்த மக்களை 13 தற்காலிக கிராமங்களில் குடியேற்றத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டுமென யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வன்னியிலிருந்து 35ஆயிரம் பொதுமக்கள் வெளியேறியிருப்பதாகவும், அவ்வாறு வெளியேறியவர்கள் தமது சொந்த மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டுமெனவும் யாழ் ஆயர், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply