வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 64 முதியவர்கள் வவுனியா அன்பகம் இல்லத்தில்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்திருப்பவர்களில் 64 வயோதிபர்கள் வவுனியா பம்மைமடுவிலுள்ள அன்பகம் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடிநிலையத்தின் தலைவர் பொன்னம்பலம் நித்தியாநந்தம் தெரிவித்தார்.
கிளிநொச்சியிலிருந்த தமது முதியோர் இல்லம் போர் சூழ்நிலை காரணமாகப் பல்வேறு சிரமங்களின் மத்தியில் செயற்பட்டு வந்ததுடன், மோதல்கள் காரணமாகப் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 7 பெற்றோர்கள் உட்பட 65 முதியவர்கள் இருந்ததாகவும், அண்மைய மோதல்களால் வன்னேரிக் குளத்திலிருந்து இடம்பெயர்ந்து முல்லைத்தீவு புதுமுறிப்பு, கல்மடு மற்றும் சுதந்திரபுரம் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.
இறுதியாக இராணுவத்தினரின் உதவியுடன் முதியோர் இல்லத்திலிருந்த அனைவரும் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு நலன்புரி நிலையத்தில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோதும், முதியவர்களின் நிலையைக் கருத்தில்கொண்டு அவர்களை வவுனியாவிலுள்ள அன்பகம் இல்லத்தில் தங்கவைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் நித்தியானநந்தம் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்களில் 9 பேர் வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும், 65 பேரில் வவுனியாவுக்கு வந்த பின்னர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
உயிரிழந்த முதியவர் அரசாங்கத்தின் செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக நித்தியாநந்தம் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply