இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் வலுவில்லையா ?

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தைப் பற்றிய நிலைப்பாட்டை மத்திய அரசு எப்போது உறுதியாக அறிவிக்கப் போகிறது என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில், ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்திருக்கும் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம், ஈழத் தமிழர்களுக்குப் பயனளிக்காது என்றும், இலங்கையைத் தண்டிக்கும் அளவிற்கு அதிலே தீவிரமாக எதுவும் கூறப்படவில்லை என்றும்; சில அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தி.மு.க. அங்கம் வகித்து வரும் “டெசோ” அமைப்பு, அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாகவே; காழ்ப்புணர்வு கொண்டு, அமெரிக்கத் தீர்மானத்தில் எதுவுமே இல்லை என்பதைப்போல தமிழ்நாட்டிலே சிலர் பேசி வருவதை உலகத் தமிழர்கள் கவனித்து வருகிறார்கள்.

அமெரிக்காவின் தீர்மானமே உறுதியானது – இறுதியானது – தீவிரமானது என்று “டெசோ” அமைப்பு கருதி எப்போதும் அறிவிக்கவில்லை. எனினும் அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று “டெசோ” கோரிக்கை வைப்பதற்கு சில அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன.

ஈழத் தமிழர்களை நசுக்கி நாசமாக்கி வரும் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகளின் கேந்திரமையமான ஐ.நா. அவையில் மற்ற எந்த நாடும் தீர்மானம் எதையும் முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்காத நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா தீர்மானம் ஒன்றினைக் கொண்டு வரும் வாய்ப்பினைப் பெற்றிருப்பதை நாம் வரவேற்க வேண்டும்.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்பதால்தான் சென்ற முறை அந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டது. இந்த முறையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள், அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

உலக நாடுகளுக்கெல்லாம் பொதுவானதொரு மன்றத்தில், இலங்கைக்கு எதிரான முதல் நகர்வை ஏற்படுத்தியது அமெரிக்க வல்லரசு தான். அந்த நகர்வுதான் உலகெங்கிலும் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிய அக்கறையையும், பரிவையும் – இலங்கைச் சிங்கள அரசுக்கு அதிர்ச்சியையும் பயத்தையும் உருவாக்கியிருக்கிறது. இதனை உலகத் தமிழர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

“டெசோ” அமைப்பு நேரடியாக ஐ.நா.மன்றத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானம் எதையும் முன்மொழிந்திடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கவில்லை. இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதே நிலைதான் என்பதை உணர வேண்டும்.

அதனால்தான் தமிழினப் படுகொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்குப் பொறுப்பான ராஜபக்சேவின் போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மையுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கான வலிமைமிக்கத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு செல்ல வேண்டும். பொது வாக்கெடுப்பு குறித்த தனித் தீர்மானம் ஒன்றினை இந்தியாவே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னெடுத்துச் சென்று, ஈழத் தமிழர் வாழ்வில் விடிவு காண வேண்டும்.

குறைந்தபட்சம் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தையாவது உரிய திருத்தங்களுடன் இந்தியா ஆதரித்திட வேண்டும்; என்று “டெசோ” சார்பில் நாம் தொடர்ந்து குரலெழுப்பியும், கோரிக்கைகள் கொடுத்தும் வருகிறோம். இன்றைய சூழலில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதற்கும், இந்தியாவே தனியானதொரு தீர்மானத்தைக் கொண்டு செல்வதற்கும் அழுத்தம் தருவதன்னியில்;

நாமே உலக நாடுகள் அவையில் தீர்மானத்தை முன்மொழிய முடியுமா; நாமே நேரடியாக இலங்கைக்குக் கெடு விதித்திட இயலுமா; நாமே படை திரட்டிக் கொண்டு, இலங்கையைப் போருக்கு அழைப்பது சாத்தியமா; என்பதையெல்லாம் இங்குள்ள சில அரசியல்வாதிகள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“டெசோ” இப்போது மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டைவிட, உயர்ந்த – உகந்த நிலைப்பாட்டை ஈழத்தமிழர் குறித்து; ஓயாமல் கருத்துகள் தெரிவித்து வரும் இந்தச் சில அரசியல்வாதிகள் வகுத்தளிப்பார்களேயானால், ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் உவகையோடு அதனை வரவேற்பார்கள்!

அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை முன் மொழிய அவர்களாகவே முன் வருகின்ற நேரத்தில் – அந்தத் தீர்மானத்தை 30க்கு மேற்பட்ட உலக நாடுகள் ஆதரிக்கத் தயாராக இருக்கும்போது – குறைந்தபட்சம் அதையாவது நாம் வரவேற்க வேண்டாமா என்ற எண்ணத்தோடுதான்; ஈழத் தமிழர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களை முழுமையாகத் துடைத்திட உடனடியாக இயலாவிட்டாலும், அவர்களுக்கு ஆறுதல் வழங்கிடும் வகையிலேதான், “டெசோ” அமைப்பு, அமெரிக்கா, தீர்மானத்தை முன்மொழிவதை வரவேற்றும், அதை இந்திய அரசு உரிய திருத்தங்களோடு ஆதரிக்க முன்வர வேண்டுமென்றும் கேட்டு வருகிறோம்.

ஆனால் இங்கேயுள்ள சிலர் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் அது சரியில்லை, இது சரியில்லை என்றெல்லாம் வேண்டாத விமர்சனம் செய்து குட்டையைக் குழப்பப் பார்க்கிறார்கள்!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply