நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதாக அமெரிக்க தீர்மானம் அமைய வேண்டும்!

ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் வலுவானதாக்கப்பட வேண்டும் என்று இலங்கையின் உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் சில கோரியுள்ளன. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரிட்டனின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் மேம்படுத்தக் கூடியதாக இந்த புதிய தீர்மானம் அமைய வேண்டும் என்று கோரியுள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கை மீதான போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் இனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டு ஆகியவை குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

இதேவிடயங்களை வலியுறுத்தியுள்ள மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவைகள் என்ற அமைப்பு, மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அதன் பாதுகாவலர்கள் இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த தடவை ஜெனிவாவில் வந்து இலங்கையில் மனித உரிமைகளுக்காக குரல்கொடுத்தவர்களுக்கு ஒரு அமைச்சரவை உறுப்பினரே அச்சுறுத்தல் விடுத்ததாகவும், இந்தத் தடவையும் அப்படியான நிலைமைகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அமைப்பின் இயக்குனர் கூறியுள்ளார்.

இதற்கிடையே இலங்கையில் உள்ளூரைச் சேர்ந்த அமைப்பு ஒன்றும் அமெரிக்க தீர்மானம் வலுவானதாக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

வடக்கு கிழக்கில் பணியாற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கடந்த தடவை வந்த அமெரிக்க தீர்மானம் இலங்கையில் மனித உரிமைகள் மேம்படுவதில் உரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னரும் கூட இலங்கையில் செய்தியாளர்கள் உடபட பலர் தாக்குதலுக்கு உள்ளாதல், மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்வதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply