ஐநாவில் இலங்கை நிலவரங்கள் குறித்து பலதரப்பு வாதங்கள்

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில், பல்வேறு நாடுகளின் மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்து ஆண்டு தோறும் ஆராயும் யுனிவர்சல் பிரியாடிக் ரெவ்யூ எனப்படும் வழிமுறை பற்றிய அமர்வு வெள்ளியன்று நடந்தது. அதில் குறிப்பாக இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்த வருடாந்த ஆய்வு மிகவும் முக்கியமான ஒன்றாக நடந்தேறியிருக்கிறது.

அந்த அமர்வில் இலங்கையின் சார்பில் வாதங்களை முன்வைத்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், இலங்கையில் நடந்தது 30 ஆண்டுகாலம் நடந்த ஒரு கொடிய மோதல் என்பதால், அதன் மூலமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்று உரையாற்றினார்.

அங்கு பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை எவரும் மறந்து விடக்கூடாது என்றும் குறிப்பிட்ட அமைச்சர் சமரசிங்க, அதேவேளை அங்கு விடுதலைப்புலிகள் அமைப்பு நடத்திய கொடூரமான தாக்குதல்களை, நடவடிக்கைகளை எவரும் பேச முன்வரவில்லை என்றும் பேசினார்.

அவரை அடுத்து பல நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்க தரப்பு வாதங்களை ஆதரித்தும், எதிர்த்தும் பேசினார்கள்.

சீனா, அல்ஜீரியா, பெலரஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் பேசின. இலங்கைக்கு அதனது நிலவரங்களை சீர் செய்ய நீண்ட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அவை கேட்டுக்கொண்டன.

அதேவேளை, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கை தனக்கு வழங்கப்பட்ட கடந்த 3 ஆண்டுகளில் இந்த விடயங்களில் முன்னேற்றத்தை காணத்தவறி விட்டது என்றும், ஆகவே இலங்கை விடயத்தை கையாள ஒரு சர்வதேச பொறிமுறை அவசியம் என்றும் பேசின.

அதனை அடுத்து பல மனித உரிமைகள் அமைப்புக்களும் (அரச சார்பற்ற நிறுவனங்கள்) அங்கு பேசின. இலங்கைக்கு எதிராகவே அவை பெரும்பாலும் தமது கருத்துக்களை அங்கு முன்வைத்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply