ஆட்கடத்தல்களை இலங்கை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது!
சட்ட விரோதமாக ஆட்களை அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு கடத்துவது பாரதூரமான செயலென குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நாட்டுக்கு நாடு மேற்கொள்ளப்படும் எத்தகைய ஆட்கடத்தலையும் இலங்கை அரசாங்கம் அறவே சகித்துக் கொள்ளமாட்டாதென்றும் தெரிவித்தார்.
புகலிடம் கோருவோருக்கான அவுஸ்திரேலிய பிரதமரின் நிபுணர் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற தலைமை வான்படைத் தளபதி அங்குஸ் ஹோஸ்டன் தலைமையிலான அவுஸ்திரேலிய உயர்மட்டக் குழுவினர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அரவது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி இத் தூதுக்குழுவினருடன் அமைச்சரை சந்தித்தார்.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் 2009ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஊடாக சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் ஆட்கடத்தல் தொடர்பான மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கும், நீதவான் நீதிமன்ற நீதவான்களுக்கும் அறிவுறுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதற்கும், வழக்குத் தொடுநர்களுக்கு களவாக ஆட்களை கடத்தல், சட்ட விரோத பணக் கடத்தல் என்பவற்றின் போதும், ஏனைய நாடுகளை ஊடறுத்துச் செல்லும் போதும் நடைபெறும் குற்றங்கள் பற்றிய செயலமர்வுகள் நடத்துவதற்கும் அவுஸ்திரேலியா உதவி வழங்கி வருகிறது.
இதனோடு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும், பொதுமக்களுக்கும் புதிய குற்றங்கள் பற்றி உணர்த்துவதினதும், அறிவுறுத்துவதினதும் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் ஹக்கீம் அவை தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கி வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
பிரஸ்தாப புரிந்துணர்வு உடன்படிக்கையின் பயனாக இருநாடுகளுக்கும் இடையிலான நீதித்துறையுடன் தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்பானது நாடுகள் இரண்டிற்கும் பெரிதும் நன்மை பயக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோத ஆட்கடத்தல் விவகாரம் தொடர்பான அவுஸ்திரேலியத் தூதுவர் கிறெச் ஷிட்டிக் மனிதக் கடத்தல் மற்றும் நாடுகளை ஊடறுத்துச் செல்லும் போது நிகழும் குற்றச்செயல்கள் தொடர்பான பாலி செயன்முறை இணை முகாமையாளர் கிறேக் கெல்லி, அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள பிராந்திய பணிப்பாளர் ஜோஸ் அல்வரெஸ் ஆகியோரும் இத் தூதுக் குழுவில் இடம்பெற்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply