இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: ப.சிதம்பரம் நம்பிக்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.,ஏ. சுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது: இலங்கை பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து அறிந்தேன். மாணவர்களின் போராட்டத்தை வரவேற்கிறேன். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அந்த உரிமை உண்டு. இலங்கை பிரச்சினை பற்றி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எந்த சூழலில் எந்தெந்த கருத்துக்களை தெரிவித்தன என்பது குறித்து அனைவரும் அறிவர்.
தமிழக முதல்-அமைச்சர் சட்டசபையிலும், அதற்கு வெளியிலும் என்ன கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறித்து பதிவுகள் உண்டு. தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த பிரச்சினை குறித்து சட்டசபையிலும், வெளியிலும் என்னென்ன கருத்துக்களை கூறி உள்ளார் என்ற பதிவுகளும் உண்டு.
விடுதலைப்புலிகள் பற்றி ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு விதமான கருத்துக்கள் உண்டு. தற்போது நம்முன் இருப்பது இலங்கை வாழ் தமிழர்களுக்கு சமவாழ்வையும் சம உரிமையையும் பெற்றுத்தருவது ஒன்றே. இதற்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
ஐ.நா. சபை தீர்மானம் பற்றி கூறினார்கள். ஜ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானம் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. அதற்கு முன்கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. உலக நாடுகளுக்கு மத்தியில் கொண்டு வரக்கூடிய ஒரு தீர்மானம் மிக கவனத்தோடு தயாரிக்கப்பட வேண்டிய ஒன்று.
வருகிற 22ஆம் திகதி வரவுள்ள தீர்மானத்தின் மீது கடந்த ஆண்டு ஐ.நாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததுபோல, இந்த முறையும் ஆதரிக்கும் என நம்புகிறேன்.
சுதந்திரமான, நம்பகத்தன்மை மிகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்கிறோம். தமிழகத்திற்காக இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் என நான் நம்புகிறேன். நான் நம்புவதை நீங்களும் நம்புங்கள். நமது நம்பிக்கையை மாணவர்களுக்கும் ஊட்டுங்கள், தமிழகத்திற்கு இந்தியா நன்மையே செய்யும் என நம்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply