மும்மொழிகளையும் கட்டாயம் பயன்படுத்த ஜனாதிபதி உத்தரவு
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் போது மும்மொழிகளையும் கட்டாயம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.கண்காட்சி பூமியில் அமைக்கப்படும் சகல காட்சி கூடங்கள், பதாதைகள், கட்அவுட்கள், பனர்களில் விசேடமாக அரச கரும மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் கட்டாயம் பொறிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தினகரனுக்குத் தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டுக்கான தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சி எதிர்வரும் 23 ஆம் திகதி அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பவியல் நிறுவனம் மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பில் இடம்பெறவுள்ளது.
இந்த கண்காட்சி ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற சகல ஆலோசனைக் கூட்டங்களின் போதும் அரச கரும மொழிகளின் பயன்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, மும்மொழி அமுலாக்கலை, கண்காட்சியின் போது கட்டாயம் நடைமுறைப்படுத்துமாறு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு விசேட சுற்று நிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளதாக அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
இம்முறை கண்காட்சியில் காட்சிக் கூடங்களை அமைக்கும் சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு மும்மொழி அமுலாக்கல் விடயம் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் சுற்று நிருபத்தையும் அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அநுராதபுரம் ஓயாமடு பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆறாவது தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் போது மும்மொழி அமுலாக்கல் தொடர்பில் காணப்பட்ட சில குறைபாடுகளை அடுத்து அதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே விசேட சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
கொழும்பிலுள்ள அமைச்சுக்கள், திணைக்களங்களிலிருந்து வருகை தருபவர்களிடையே மும்மொழிகளில் விபரிக்கக் கூடியவர்கள் இல்லாத பட்சத்தில் அவர்கள் தங்களிடம் கோரிக்கை விடுத்தால் பட்டதாரிகளை வழங்க கச்சேரி நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற அடிப்படையில் மூவின மக்களும் ஐக்கியத்துடன் வாழும் அம்பாறை மாவட்டத்தில் விஷேடமாக மும்மொழி அமுலாக்கல் மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply