இலங்கை இறுதிப் போரில் இந்தியாவின் பங்களிப்பை கண்டறியுமாறு கோரி வழக்குத் தாக்கல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்தியாவுக்கும் பங்கு இருந்தது என ஐ.நா. தெரிவித்திருப்பதால், இந்தியாவின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மலேசியா, கோலாலம்பூரைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ. கணேசலிங்கம் என்பவர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.  அம் மனுவில் கணேசலிங்கம் கூறியிருப்பதாவது: 

நான், சிங்கப்பூரில் பிறந்த இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்தவன். ஐ.நா. அமைத்த குழு தனது அறிக்கையில், “பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்´ என அழைக்கப்படும் குறிப்பிடப்படும் இலங்கைப் போரில், இலங்கை அரசுடன், இந்தியாவும் ஒத்துழைத்து செயல்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பங்களிப்பு என்பது எந்த அளவுக்கு இருந்தது, அதன் முழு பரிமாணம் என்ன என்பது குறித்து, சுதந்திரமாக விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்.

சிங்கள ராணுவத்தினர், 40 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றதற்கு போதுமான ஆதாரம் உள்ளது என ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை இப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் இத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட 3 இடங்களுக்கு 3 லட்சம் இலங்கைத் தமிழர்கள் இடம்பெயரச் செய்யப்பட்டனர். இதில், 2 பாதுகாக்கப்பட்ட இடங்கள் மீது சிங்கள ராணுவம் வேண்டுமென்றே குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.

இவை தொடர்பான ஐ.நா. அறிக்கை 2011ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி உலகம் முழுக்க இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனாலும், இதுவரை ஐ.நா. அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிடவில்லை.

இலங்கைத் தமிழர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டது குறித்தும், இலங்கை உள்நாட்டுப் போரில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து விசாரிக்கக் கோரியும் சிபிஐ இயக்குநருக்கு 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடிதம் மூலம் மனு செய்தேன்.

அதற்கு இதுவரை எவ்வித பதிலும் இல்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply