இலங்கை சர்வதேச ஆதரவை இழந்து வருகிறது – முன்னாள் தூதர் தயான்
சர்வதேச அரசியல் அரங்கில் இலங்கை கடந்த மூன்றரை ஆண்டுகளில் தனக்கான ஆதரவை பெருமளவில் சிதறவிட்டிருப்பதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்கத் தீர்மானத்தின்போது, இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்தன. ஆனால் அந்த ஆதரவு இப்போது 13 நாடுகளாகக் குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 2009-ம் ஆண்டில் தனக்கு இருந்த சர்வதேச ஆதரவை இலங்கை பெருமளவு இழந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசு அது நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் சர்வதேச ஆதரவை தக்கவைத்திருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேல் எதனையும் சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், போர்க்காலச் செயற்பாடுகளுக்கான பொறுப்பு சுமத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசு மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தான் கோரப்பட்டிருக்கிறது என்றும் தயான் ஜயதிலக்க கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கிய பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் சர்வதேச சமூகத்தில் பெரும்பகுதியினர் திருப்தியடைவார்கள் என்றும் ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தெரிவித்தார்.
உதாரணத்துக்கு, இந்தியா கூட நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதையே வலியுறுத்துகிறது என்றும் அதற்கு மேலதிகமாக அந்நாடு எதையும் வலியுறுத்தவில்லை என்றும் ஜப்பானின் நிலைப்பாடும் அதுவே என்றும் தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை என்று சர்வதேச சமூகத்தில் பெரும்பான்மை தரப்பினர் கருதுவது தவறு என்று ஐநாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
கண்ணிவெடிகளை அகற்றுதல், உட்கடமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன என்று சமரசிங்க கூறினார்.
´இப்படியான முன்னேற்றங்கள் மூன்று வருடங்கள் பத்து மாதங்களில் நடந்திருக்கிறன என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனைய விடயங்களில் முன்னேற்றம் காண்பதற்கு எங்களுக்கு கால அவகாசம் தேவை´ என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply