பொறுப்புக்கூறல், நல்லிணக்க விடயத்தில் இலங்கைக்கு அர்த்தமுள்ள நடவடிக்கை தேவை – அமெரிக்கா
இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். ஜெனிவா தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டதை அடுத்து, வொசிங்டனில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு, பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் மற்றும் உறுதியற்ற நிலையில் இருந்து, இறுதியான சமாதானத்தை அடைவதற்கான தொடர்ந்து சுபீட்சமான பாதையில் தொடர்ந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது.
இந்தத் தீர்மானம் 2012ம் ஆண்டு தீர்மானத்தைப் போன்று, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்நோக்கி நகர்த்த வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் தனது சொந்த மக்களுக்கான பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா, தனது சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளை, சில முக்கியமான முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ள போதிலும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறையவே உள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் விடயங்களில் அண்மையில் ஏற்பட்ட எதிர்மறையான நிலைமைகளில் இருந்து மீளத் திரும்பும் என்றும் நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்த முக்கியமான பணிகளுக்கு உதவ அமெரிக்கா தயாராகவே உள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் எமது தொடர்புகள் முன்நோக்கிச் செல்வதையும், இலங்கை மக்களுடன் எமது நட்புறவை வலுப்படுத்திக் கொள்வதையும் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply