அமெரிக்காவின் எல்லா தீர்மானங்களும் நியாயமானதல்ல – கமல் பேட்டி
இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட நடிகர் கமல் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இலங்கை தமிழர் பிரச்சினையில் மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகர்கள் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறும்போது,
மாணவர்கள் போராட்டத்தில் நாங்கள் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்றில்லை. இலங்கையில் நடந்தது பற்றியும், பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த புகைப்படத்தையும் பார்த்துவிட்டு எவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்கலாம். அதற்கு தமிழனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அது யாராக இருந்தாலும் பங்கெடுத்து கொள்வார்கள்.
இங்கே தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான நிகழ்வு என்னவென்றால், மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது… ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள். அதில் சினிமா நட்சத்திரங்கள் பங்கெடுத்து அந்த ஒளியை வாங்கிக் கொள்ளக்கூடாது.
இந்த போராட்டத்தில் மாணவர்கள் கதாநாயகர்கள். இதில் நாங்கள் கலந்துகொண்டு எதற்கு காமெடி பண்ணனும். அதனாலேயே நான் கலந்துக்கொள்ளக்கூடாது என்று நினைக்கிறேன். இது அவர்களுடைய போராட்டம். அவர்களுடைய குரலில் அதை பேசுவதுதான் எங்களுக்கு பெருமை. என் மகன் பேசுகிறான். என் தம்பி பேசுகிறான். எனக்காக…!
நாளைய அரசியல்வாதி அங்கு இருக்கக்கூடும். அதனால் அவனை மிரட்டக்கூடாது. அவன்கிட்ட கேட்டுக்கணும். அறப்போராட்டத்தில் ஈடுபடும் வரையில் அவனை தடுக்கும் யாருக்கும் அருகதை இல்லை. வன்முறையில் ஏற்பட்டால் அதை தடுக்க வேண்டும் என்பது சட்டப்பிரச்சினை. அறப்போராட்டத்தில் இருப்பவனை மிரட்டுவதோ அல்லது அதட்டுவதோ கூடாது. அந்தப் பிள்ளை தந்தைக்கு உபதேசம் செய்யும் பிள்ளை. அவனை விட்டுவிடவேண்டும்.
இந்த போராட்டத்தில் முன் நின்று போராட வேண்டியவர்கள் மாணவர்கள். நாங்கள் பின்வரிசையில்தான் நிற்கவேண்டும். இதில் மாணவர்களோ, அல்லது யாரும் பங்கெடுத்துக் கொள்ளவில்லையென்றால் நாங்கள் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். அழகான, நல்ல குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பேசட்டும் அவர்கள். இந்த மொழிதான் நல்ல மொழி. இதில் எல்லோருமே ஒதுங்கி இருக்கிறார்கள்.
அரசியல்வாதிகளுக்கு வேண்டுமென்றால் தங்களது ஒளி மங்கிவிடும் என்பதற்காக போய் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பார்க்கலாம். எங்களுக்கு அது தேவை இல்லை. எங்களுக்கு கிடைக்கவேண்டிய பாராட்டும், புகழும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
அமெரிக்கா மிகப்பெரிய வியாபார நிறுவனம். அவர்கள் கொண்டுவரும் எல்லா தீர்மானங்களும் நியாயமாக இருக்க வாய்ப்பில்லை. இந்த முறை நமக்கு சாதகமாக வந்திருக்கிறது. எல்லா முறையும் அது சாதகமாக இருக்கும் என நம்பமுடியாது.
உண்ணாவிரதம், தீக்குளிப்பு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன் நான். சீதைக்கே அக்னி பிரவேசம் செய்திருக்கக்கூடாது என்று நம்புபவன். இதுவரைக்கும் பல உண்ணாவிரதங்களில் நான் கலந்து கொண்டதே இல்லை. இந்தியாவிலேயே பாதி பேர் பட்டினியாக கிடக்கின்றனர். இவர்களுக்கு உண்ணாவிரதத்தைக் கற்றுக் கொடுக்கவேண்டுமா?
இவ்வாறு அவர் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply