யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது!

வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகை குறைக்கப்பட்டமையானது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் நசுக்கப்படும் செயற்பாடாகும் என்று போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்’ தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ப த்துள்ளதாவது,

‘1983ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் 2ஆவது தடவையாகவும் குறைக்கப்பட்டுள்ளமையானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலை நசுக்கும் ஒரு செயற்பாடாகவே நாம் கருதுகிறோம்.

முதலாவதாக யாழ் மாவட்டத்தில் 11ஆக இருந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தற்போது 9ஆக குறைக்கப்பட்டுவிட்டது. இதேபோன்று வன்னியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்பட்டு இந்த எண்ணிக்கை ஆறில் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது. கணித ரீதியில் இச்செயற்பாடு சரியானதாக தோன்றலாம். ஆனால் பௌதீக ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும் பார்ப்போமானால் இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் செயற்பாடாகவே தோன்றுகிறது.

அதாவது உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் ஓரளவிற்கு நடைபெற்றதாக கூற முடிந்தாலும் அன்றாட சீவியத்துக்கே கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கும் அவர்கள், வாக்காளர் அட்டையில் தமது பெயரை பதிவு செய்ய அக்கறை காட்டியிருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இதனை விட முகாம்களில் இருப்பவர்களைத் தவிர உறவினர் வீடுகளிலும், வெளி மாவட்டங்களிலும், இந்தியாவிலும், ஏன் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் வசித்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் இன்னமும் மீள்குடியேற வழி ஏற்படுத்தப்படவில்லை.

உண்மையை உற்று நோக்குவோமானால் போரால் பாதிக்கப்பட்ட பகுதி வாக்காளர்கள் தமது பதிவுகளை முழுமையாக மேற்கொள்ள இன்னமும் கால அவகாசமும், ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் தேவை. இதனை விடுத்து அவசர  கதியில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

இது மக்கள் மத்தியில் நல்லிணக்கத்திற்கான அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமையும். உண்மையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்திருக்க வேண்டும். யுத்தம் காரணமாக அது சாத்தியப்படாமல் போய்விட்டது. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக எனது பணிவான வேண்டுகோள் யாதெனில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கையை அதிகரிக்காது விட்டாலும் பரவாயில்லை, அதன் எண்ணிக்கையை குறைக்க வேண்டாம் என்பதேயாகும்’ என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரை மேற்கொள்ளப்படும் எந்த கணிப்பீடுகளும் மனிதாபிமானத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கலாம். ஆனால் நீதி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கிட்ட வேண்டும். அதுவே உண்மையான நல்லிணக்கத்திற்கும், இணக்கப்பாட்டிற்குமான வழியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply