புதிய பாதுகாப்பு வலயத்துக்குள் வருவோர் ஆகாய மார்க்கமாக கண்காணிப்பு : இராணுவ பேச்சாளர்

முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது 100 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்புக்குள் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார இன்று (பெப். 18) தெரிவித்தார். பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மகாநாடு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார்.

குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ள புலிகள் மீது இராணுவத்தின் 53,55,57,58,59 ஆகிய படையணிகளும் அதிரடிப்படையின் 2,3,4,8, ஆகிய பிரிவுகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
20 முதல் 22 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட புதிய பாதுகாப்பு வலயத்துக்கு பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் நாளாந்தம் வருகின்றனர். இவர்களின் பாதுகாப்புக் கருதி படையினர் இவர்களை ஆகாய மார்க்கமாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் 35,756 பொது மக்கள் புலிகளிடமிருந்து தப்பி படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சமைத்த உணவும் மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகின்றன. நோயுற்றவர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

புலிகளிடமிருந்து தப்பி வரும்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் மீட்கப்பட்ட 1611 பேர் வவுனியா மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றர். சிகிச்சை முடிந்த பின்னர் வவுனியா நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply