இலங்கையில் பிரித்தானியாவுக்கு எதிரான நிலைப்பாடு வலுப்பெற்றுள்ளது
இலங்கையில் மேற்குலக நாடுகளுக்கு எதிரான நிலைப்பாடு வலுப்பெற்று வருவதாக பிரித்தானிய தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், அண்மைக்காலமாக தேசப்பற்றுசார் நிலைப்பாடுகள் வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேற்குலக நாடுகளுக்கு குறிப்பாக பிரித்தானிய எதிர்ப்பலை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஏனைய வெளிநாட்டு ராஜதந்திர அலுவலகங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா வெளியிட்டிருந்த பயண எச்சரிக்கைக்கு இலங்கை எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன், பயண எச்சரிக்கையில் திருத்தங்களை செய்யுமாறும் கோரியிருந்தது.
பிரித்தானியாவின் பயண எச்சரிக்கையானது அந்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை பாதிக்கும் என சுற்றுலாத்துறைசார் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக அண்மைய பயண எச்சரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், அரசாங்கம் பயங்கரவாத தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளை கடுமையாகப் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இராணுவத்தின் பிரசன்னம் அதிகமாகக் காணப்படுவதுடன், அதிகளவான சோதனைச் சாவடிகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டமிட்ட ஆயுதக் குழுக்களினால் கடத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும், இதுவரையில் பிரித்தானிய பிரஜைகளுக்கு இவ்வாறான அனர்த்தங்கள் எதுவும் ஏற்பட்டதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரித்தானிய பிரஜைகள் ஆபத்துக்களை எதிர்நோக்கிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு என்ற போதிலும், வாகன விபத்துக்கள், கடன் அட்டை மோசடி மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply