வவுனியாவிற்கு 1500 தாதியர்களை அவசரமாக அனுப்புவதற்கு அரசு தீர்மானம்
வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்க ளுக்கு ஆரோக்கிய சேவை வழங்கவென 1500 மருத்துவத் தாதியரை உடனடியாக வவுனியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.
இந்தத் தாதியர் வவுனியாப் பகுதியில் அடுத்துவரும் ஆறு மாதங்களுக்கு தொடராகக் கடமையாற்ற வேண்டும் எனவும் அமைச்சு தீர்மானித்திருக்கிறது.
இதேநேரம், கொழும்பிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிக ளில் கடமை புரியும் எட்டு முன்னணி மருத்துவ நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழுவொன்றையும் அடுத்துவரும் இரு தினங்களுக்குள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கவும் அமைச்சு முடிவு செய்திருக்கிறது.
புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து இற்றை வரை யும் 35 ஆயிரத்து 756 பொதுமக்கள் தப்பி வந்துள்ளனர். இவர்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 1 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதே நேரம், முல்லைத்தீவில் சிக்குண்டிருந்த 1150 நோயாளர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடல் மார்க்கமாக அழைத்து வந்துள்ளது. இவர்கள் திருமலை, வவுனியா, பொலன்னறுவை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மக்களுக்கான ஆரோக்கிய சேவை தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று கொழும்பில் அவசரக் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இதேவேளை, மன்னார், மதவாச்சி ஆஸ்பத்திரிகளின் ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மருத்துவ நிபுணர்களையும் தாதியரையும் உடனடியாக அவ்வாஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக் கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் டாக்டர்கள், தாதியர் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களின் தங்குமிட மற்றும் உணவுவசதிகளைக் கவனிக்கவென மூன்று அதிகாரிகளை சுகாதாரப் பராமரிப்பு அமைச்சு இணைப்பாளராகவும் நியமித்திருக்கிறது.
நிவாரணக் கிராமங்களில் வாந்தி, வயிற்றோட்டம், வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் தோற்றம் பெறாதிருப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளுமாறு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply