பெரிய வெள்ளி இன்றாகும்!

கிறிஸ்த்தவர்கள் இன்று (29) பெரிய வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். பெரிய வெள்ளியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கிறிஸ்த்தவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  கிறிஸ்துவின் வரலாறு, கிறிஸ்தவ வரலாறு திருச் சபையின் வரலாற்றிலும் முக்கியமான தினமாக பெரிய வெள்ளிக்கிழமை விளங்குகிறது.

நம் ஆண்டவராகிய இயேசு நமது பாவங்களுக்காக சிலுவைச் சாலை ஏற்று பாடுகள் பட்டு சிலுவையில் அறையுண்டு உயிர் நீத்த தினம் இன்றாகும்.

கிறிஸ்துவின் பாடுகளின் பாதை வரலாறு முடிந்து போனவை. நம் ஆண்டவராகிய கிறிஸ்து மரித்து உயிர்த்து நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் தம் பாடுகள் மூலம் எம்மிடம் எதிர்பார்த்தது நம் மூலம் நிறைவேறவில்லை என்பதே உண்மை.

திருச்சபை கிறிஸ்துவின் பாடுகளைத் தியானிக்கும் விசேட காலமாகத் தவக்காலத்தை எமக்குத் தந்துள்ளது. இக்காலம் விபூதிப் புதனோடு தொடங்கி பெரிய வெள்ளியோடு முடிவடைகிறது. இக்காலத்தில் வரும் இறுதி வாரம் குருத்தோலை ஞாயிறோடு ஆரம்பித்து பெரிய வியாழன், பெரிய வெள்ளி, அல்லேலூயா சனியுடன் உயிர்ப்புப் பெரு விழாவோடு நிறைவடைகிறது.

பொதுவாகவே தவக்காலம் எமக்குள் மாற்றல்களை ஏற்படுத்தும் காலமாக தரப்பட்டுள்ளது. தவக்காலத்தில் பல்வேறு ஒறுத்தல்கள், செப, தப முயற்சிகள், சிலுவைப் பாதை தியானங்கள் மற்றும் விசேட வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் மனித மனங்களில் சிந்தனைகளில் சுபாவங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே உள்ளன.

தவக்காலமாகிய 40 நாட்களை முடித்துவிட்டு நாம் நம்மைத் திரும்பிப் பார்த்தால் அத்தகைய மாற்றங்கள் நமக்குள் ஏற்பட்டிருக்கின்றதா என்ற கேள்வியை எமக்கு நாமே கேட்க வேண்டிவரும். ஒவ்வொருவருடமும் தவக்காலம் வருகிறது. ஒறுத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் நமக்குள் மனமாற்றங்கள் இடம்பெறுகின்றனவா என்பதே கேள்விக்குறி. அவ்வாறு நடைபெறவில்லை என்றால் எமது ஒறுத்தல் முயற்சிகளும் வழிபாடுகளும் தியானங்களும் அர்த்தமற்றவையேயாகும்.

கிறிஸ்துவின் பாடுகளைத் தியானிக்கும் நாம் நாமே அந்தப் பாடுகளுக்குக் காரணமானவர்கள் என்பதை உணர்ந்து நமது பாவமே பாரச் சிலுவையாக இயேசுவின் தோளை அழுத்தின என்பதைத் தெரிந்துகொண்டு அவற்றுக்காக நாம் மனம் வருந்தி நம் பாவங்களிலிருந்து மீள்வதற்கு இப்போதாவது நாம் முயற்சிக்கா விட்டால் தவக்காலத்தில் நாம் மேற்கொண்ட முயற்சிகளும் பிரதி பலன்களும் பொருளற்றவையாகிவிடும்.

நம் உள்ளாழம் துப்புரவு செய்யப்படவேண்டும். நமது பாவ சிந்தனைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும். பிறரோடு சிநேகிப்பதற்குப் பதிலாக பகைமையைச் சேவிக்கும் நமது மனநிலையில் மாற்றம் ஏற்படவேண்டும். நமது சுவாவங்கள் இதற்குக் காரணமாக இருந்தால் எமது சுபாவங்களிலிருந்து எம்மை மாற்ற வழிவகை செய்வது முக்கியம்.

கிறிஸ்துவின் பாடுகளில் பங்குபெறும் நாம் அவரது உயிர்ப்பிலும் பங்குபெற நம் வாழ்க்கை மாற்றம் மிக முக்கியமானதாகும். பரிசுத்தவாரம் அதற்கு உறுதுணையாகட்டும்.

இயேசுவின் சிலுவையில் நம் பாவங்களை அறைவோம் அவரது உயிர்ப்பில் நாமும் புது மனிதர்களாக உயிர்ப்போம். இறை இயேசுவின் அருள் ஆசீர் அனைவருக்கும் கிட்டுவதாக.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply