இன ஐக்கியத்தை குலைக்க முயற்சி – பிரதமர் எச்சரிக்கை

நாட்டில் இனங்களுக்கு இடையில் காணப்படும் ஐக்கியத்தை சீர்குலைக்க சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன. இந்த சதிவலையில் எவரும் சிக்க வேண்டாமென பிரதமர் டி. எம். ஜயரட்ன வேண்டுகோள் விடுத்தார். சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதங்களின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற நிலையிலேயே சில குழுக்கள் இதனை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பவியல் நிறுவன வளாகத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்ற ஏழாவது தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நேற்று முன்தினம் நள்ளிரவுடன் நிறைவு பெற்றது.

இதனை முன்னிட்டு கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலக காட்சி கூடத்தில் நேற்று முன்தினம் மாலை நிறைவு நாள் பிரதான வைபவம் இடம்பெற்றது.

பிரதமர் டி. எம். ஜயரட்ன, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பிரதமர் மேலும் உரையாற்றுகையில் :-

யுத்தத்திற்கு பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொண்டுள்ளது. அதேபோன்று தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை முன்னிட்டும் நான்கு மாவட்டங்களில் பாரிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளால் மேற்கொள்ள முடியாது போன துரித அபிவிருத்தி பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண் டுள்ளது. எமது நாட்டைப் போன்று உலகின் எந்த நாடுகளிலும் 30 வருட யுத்தம் இடம்பெறவில்லை. எனினும் அவர்களினால் நாட்டை துரித அபிவிருத்தி செய்ய முடியாது போனது. ஆனால் அதனை நாங்கள் செய்து முடித்துள்ளோம்.

அபிவிருத்தி விடயங்களில் எம்மை எவரும் குறை கூற முடியாது. நாங்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முறை முழு உலகிற்கும் முன்மாதிரியானதாகும். சிலர் எமக்கு சில குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

உலகில் குறைபாடுகள் இல்லாத எந்த நாடும் கிடையாது. சிறிய சிறிய குறைபாடுகள் இருக்கலாம். அவற்றை தவிர்க்க முடியாது. குறைபாடுகள் முழுமையாக இல்லாதொழிப்பதாக இருந்தால் மரணிப்பதை தவிர வேறு வழியில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சகல சந்தர்ப்பங்களிலும் மக்களின் நலன் கருதியே தீர்மானங்களை மேற்கொள்வதுடன் செயற்படுவார். அது அவரது கொள்கை யாகும்.

கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினருக்கும் சிரமமாக இருந்தாலும் மக்களின் நலன் கருதியே மேலும் ஒரு தினம் கண்காட்சியை நீடித்தார். இது எங்களது சரியான தீர்மானம் என்பது இன்றைய இறுதிநாளில் வருகைத் தந்திருந்த பெரும் எண்ணிக் கையான மக்களை பார்க்கும் போது தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply