எமக்கு ஒரு நாடு, ஒரு தலைவர் என்பதையே நான் நம்புகிறேன் என்றார் கருணா அம்மான்

விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு இலங்கை இராணுவத்தினர் மேலும் 18 மாதங்கள் போராடவேண்டியிருக்கும் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.  
 
விடுதலைப் புலிகளின் பகுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தாலும், புலிகளை அழிப்பதற்கு மேலும் 18 மாதங்கள் போராடவேண்டியிருக்கும் என ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் கருணா கூறினார். புலிகள் தமது பெருமளவு நிலப்பகுதியை இழந்தாலும் தம்வசமிருக்கும் நிலப்பரப்பிலிருந்து கொரில்லா முறையிலான தாக்குதல்களை நடத்துவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

“இராணுவத்தினர் நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்திவருகின்றனர். வடபகுதியைப் பொறுத்தவரையில் அங்குள்ள மக்கள், களநிலவரங்கள், எந்தெந்தப் பகுதிகள் மக்கள் செறிந்துவாழும் பகுதிகள் போன்ற தகவல்களை இராணுவத்தினருடன் நான் பகிர்ந்துகொள்வேன்” என அவர் கூறினார்.

இராணுவத்தினரின் தாக்குதல்களை எதிர்கொண்டு பதில் தாக்குதல்களை நடத்துவதற்கு விடுதலைப் புலிகளிடம் தற்பொழுது சிறந்த தலைமைத்துவம் இல்லையெனத் தனது செவ்வியில் குறிப்பிட்ட கருணா அம்மான், இழக்கப்பட்ட 60 வீதமான அவர்களின் போராடும் திறன் இன்னமும் மீளவில்லையெனக் கூறினார்.

“எமக்கு ஒரு நாடு, ஒரு தலைவர் என்பதையே நான் நம்புகிறேன்” என்றார் கருணா அம்மான்.

“பொதுமக்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தலைவர் உண்மையாகக் கவலைப்படுபவராக இருந்தால் பொதுமக்களை விடுவித்துவிட்டு இராணுவத்தினருடன் நேரடியாகப் போரிடவேண்டும்” எனத் தெரிவித்தார்.

அத்துடன், மோதல்கள் நடைபெற்ற பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மேலும் பல தமிழர்கள் இணைந்துகொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர், தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழ் பேசக்கூடியவர்கள் பணிகளில் ஈடுபடுவது சிறப்பாக இருக்கும் எனவும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply