வன்னி மோதல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிப்படைவது குறித்து ஐ.நா வருத்தம்
வடபகுதியில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குமிடையே இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் மோசமாகப் பாதிப்படைவது குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி சேர் ஜோன் ஹோம்ஸ் இன்று கவலை தெரிவித்திருக்கிறார்.
விசேட விஜயமாக புதன்கிழமை பின்னிரவு கொழும்பு வந்த சேர் ஜோன் ஹோம்ஸ் இன்று மதியம் இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அவரது அமைச்சில் சந்தித்து வடக்கில் ஏற்பட்டுள்ள மனித நேய நெருக்கடிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருக்கிறார்.
இதன் பின்னர் ஊடவியலாளர்களிடம் கருத்துவெளியிட்ட சேர் ஹோம்ஸ், வடக்கில் மோதல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிப்படைவது குறித்து ஐ.நா மிகவும் கவலையும், விசனமும் அடைந்திருப்பதாகவும், இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்து நடக்கும்படி மீண்டும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களிலுள்ள மக்கள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்த அவர், நாளையதினம் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.
மோதல்களினால் பாதிக்கப்படும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காவும், நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைக் கவனிப்பதற்காகவும் ஐ.நா தொடர்ந்து இலங்கை அரசுடன் இணைந்து செயற்படும், என்றும் அவர் தெரிவித்தார்.
இங்கு கருத்துவெளியிட்ட வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, வடக்கில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களினதும், நலன்புரிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களினதும் நலன்களைக் கவனிப்பதிலும், அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்குவதிலும் அரசாங்கம் மிகவும் அர்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply