இலங்கை கிழக்கு மாகாண முஸ்லீம் இளைஞர்கள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் காயல் மகபூப் கடும் கண்டனம்

இலங்கை கிழக்கு மாகாண முஸ்லீம் இளைஞர்கள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தவறாகப் பேசியுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் மாநிலச் செயலாளர் காயல் மகபூப் விடுத்துள்ள அறிக்கை:

பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியில் “இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும், அவர்களால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது, தமிழக முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது.

இலங்கை ராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுவதைப் போல், விடுதலைப் புலிகளால் இலங்கை முஸ்லீம்கள் பல மடங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் முஸ்லீம்கள் பகுதிகளில் இரவு 12 மணிக்கு விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளுடன் புகுந்து, அங்குள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி, 24 மணி நேர அவகாசத்தில், வாழ்ந்த இடங்களை விட்டு, உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்கத் தயாராக இல்லை.

இவர்களின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்டங்கள் என்ற வரலாறு, ராமதாசைப் போன்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி பள்ளி வாசலில் இரவு தொழுகை நடந்திக்கொண்டிருந்த நிராயுதபாணியான முஸ்லீம்கள் நூற்றுக்கணக்கானவர்களை விடுதலைப் புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றதை, ராமதாசைப் போன்றவர்கள் மறந்திருக்கலாம்.

இலங்கைத் தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதையே இவர்கள் மறந்துவிட்டனர்.

பொலநறுவை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் நள்ளிரவில் புகுந்து முஸ்லீம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதை மனசாட்சி உள்ள எவறுமே மறக்க மாட்டார்கள்.

இவை அனைத்தையும் மறந்துவிட்டு, சொந்த நாட்டிலும், பிற நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிற அப்பாவி இலங்கை முஸ்லீம்கள் மீது அநியாயமான அவதூறை ராமதாஸ் சுமத்துவது, இந்திய நாட்டின் மீது விசுவாசம் கொண்டுள்ள முஸ்லீம்களை, விரட்டத் துணியும் கொடூரச் செயல்.

மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து இலங்கைப் பிரச்னையில் காய் நகர்த்தும் ராமதாஸ், இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால், மத்திய அமைச்சராக உள்ள அவரது மகனை பதவியிலிருந்து விலகச் செய்துவிட்டு அறிக்கைகளை வெளியிடட்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply