சித்திரை திருவிழா கலவரம்: பாமகவுக்கு ஜெ. கண்டனம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது அரசு, ஒரு போதும் வன்முறைகளை சகித்துக் கொள்ளாது, தேவையேற்படின் வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறார்.

அண்மையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்து சட்டமன்றத்தில் திங்களன்று கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசுகையில், தங்கள் சுய லாபத்திற்காக அப்பாவி பொதுமக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் சிலர் தூண்டிவிடுவதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார்.

பாமக நடத்திய சித்திரைத் திருவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில், கடந்த ஏப்ரல் 25ஆம் நாளன்று பாட்டாளி மக்கள் கட்சியின் ஓர் அங்கமாகவே கருதப்படும் வன்னியர் சங்கம் நடத்திய சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா தொடர்பான சுவரொட்டிகளில், ”கடல் நீரை அள்ள முடியாது, வன்னியரை வெல்ல முடியாது,” ”நாங்க உறையை விட்டு வாள் எடுத்தால், இரத்த ருசி காட்டி வைக்கும் வழக்கம் எங்க குல வழக்கமடா,” “சோழர் வம்சம் இது சோறு போடும் வம்சம் இது, எதிரிகள் யாரும் வந்தால் கூறு போடும் வம்சம் இது” என்பன போன்ற சர்ச்சைக்குரிய முழக்கங்கள் காணப்பட்டதாக முதல்வர் குறிப்பிட்டார்

விழாவிற்கான விளம்பர சுவரொட்டிகளில் சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட முதல்வர், இளைஞர்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறும் திரு. ராமதாஸ், சந்தன மரக் கடத்தல் வீரப்பனை இளைஞர்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று சொல்கிறாரா என வினவினார்.

“சட்ட ஒழுங்கு சீர்குலைந்தது”

மேலும் தமிழ்நாட்டில், பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று ராமதாஸ் கோரிவருகிறார். ஆனால் அவர் முன்னின்று நடத்திய அவ்விழாவில், பெரும்பாலான இளைஞர்கள் மது குடித்து விட்டுதான் வந்திருந்தனர் என்றார்.

“திறந்த வாகனங்களிலும் சரக்கு வாகனங்களிலும், வாகனங்களின் மேற்கூரையிலும் நின்று நடனம் ஆடியும், ஆபாசமான வார்த்தைகளை பேசியும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர், பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் பலத்த சேதத்தை விளைவித்தனர். சில இடங்களில் சாலையோரத்தில் இருந்த மற்றொரு கட்சியினரின் கொடி கம்பங்களை உடைத்தும், தேசிய தலைவர் படங்களின் முகத்தில் சாயம் பூசியும், சாதி மோதலை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டனர்.” என்ற முதல்வர், பிரச்சினை மரக்காணத்தில் துவங்கியதும் விழாவில் கலந்துகொண்டவர்களால்தான் என்றார்.

மரக்காணம் காலனி வீடுகளுக்கும் அவ்வழியே வந்த அரசுப் பேருந்துகளுக்கும் தனியார் வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. சம்பவங்களின்போது இருவர் இறந்திருக்கின்றனர். ஆனால் அவையிரண்டுமே விபத்து தொடர்பான மரணமாகவே கருதப்படுவதாக ஜெயலலிதா தெரிவித்தார்.

இரவு பத்து மணிக்குள் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உதாசீனப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற ஜெயலலிதா, தனது அரசு சமூக நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளில் விருப்பு வெறுப்பின்றி செயல்படுவதாகக் கூறினார்.

பல்வேறு இழப்புக்களைச் சந்தித்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கும் எனவும் அவர் அறிவித்தார்.

“இது போன்ற விழாக்களுக்கு காவல் துறையினர் அனுமதி தர மறுத்தால், விழா அமைப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி, அங்கே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடக்க மாட்டோம், காவல் துறையினருக்கு கட்டுப்படுவோம், அமைதிக்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என பல்வேறு உத்தரவாதங்களை உயர் நீதிமன்றம் முன்பு அளிக்கின்றனர். உயர் நீதிமன்றமும், இவர்களின் உத்தரவாதங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய பின்னணியை புரிந்து கொள்ளாமல், கடந்த காலங்களில் இது போன்ற விழா எப்படி நடத்தப்பட்டது என்பதை பார்க்காமல், சில நிபந்தனைகளின் அடிப்படையில் விழாவிற்கு அனுமதி வழங்குகிறது. ஆனால், விழா நடைபெறும் போது சென்னை உயர் நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் இவர்கள் கடைபிடிப்பதில்லை. இதுவே,இது போன்ற கூட்டங்களின் போது பிரச்சனைகள் ஏற்பட காரணமாகிறது” என்றும் ஜெயலலிதா கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply