ராமதாஸ் கைது எதிரொலி: சாலையில் மரங்கள் வெட்டிச் சாய்ப்பு; திண்டிவனம், செஞ்சியில் பதற்றம்
விழுப்புரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திண்டிவனத்தில் மர்மநபர்கள், சாலையில் மரங்களை வெட்டிப்போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். செஞ்சியில் 5 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் இப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் இறையானூர்-இடையான்குளம் பகுதிக்கு உள்பட்ட 5 கி.மீ தூரத்துக்கு ஆங்காங்கே சாலையோர மரங்களை மர்ம நபர்கள் வெட்டிச் சாய்த்து போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தினர். மேலும் டயர்களுக்கு தீ வைத்து சாலைகளில் போட்டுள்ளனர்.
இதனால், திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் திண்டிவனம் டிஎஸ்பி குப்புசாமி தலைமையிலான போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலையில் பல்வேறு இடங்களில் எரியும் டயர்களை திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் அணைத்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
செஞ்சி: ராமதாஸ் கைது எதிரொலியாக, செஞ்சி அருகே 5 அரசு பஸ்களின் கண்ணாடியை மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்கி சேதப்படுத்தினர். செஞ்சியை அடுத்த பெருங்காப்பூர் கூட்ரோடில், சாலையில் கற்களை அடுக்கி வைத்து மர்ம கும்பல் தடை ஏற்படுத்தியது.
மேலும் 4 மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் தாங்கள்கரை என்ற இடத்தில் இருந்து ஆலம்பூண்டி வரை அவ்வழியே சென்ற அரசு பஸ்கள் சென்னைக்கு செல்லும் பஸ் 2, புதுச்சேரி பஸ் 1, தாம்பரம் பஸ் 1, மழவந்தாங்கல் பஸ் 1 ஆகிய பஸ்களை கற்களை வீசியும் கம்பால் அடித்தும் சேதப்படுத்தினர். இதில் முன் பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் நொறுங்கின. இதனால் பயணிகள் அலறி அடித்து பஸ்சில் இறங்கி ஓடினர்.
இதில் பெருங்காப்பூரைச் சேர்ந்த சாலைப்பணியாளர் புருஷோத்தமன் (50), தாதங்குப்பத்தை சேர்ந்த ஐடிஐ. மாணவர் ராஜதுரை (17) ஆகிய பயணிகள் படுகாயமடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பெருங்காப்பூர் கிராமத்தை சேர்ந்த பாமக தொண்டர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply