மக்களை வாழவைப்பதற்கான யுத்தத்தை வெற்றிகொள்ள வேண்டும் : சஜித் தெரிவிப்பு

தகவல் அறிந்து கொள்ளும் உரிமை மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரமும் இன்று பறிக்கப்பட்டு, நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலைமை தொடரும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்தால், எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டு அழுத்தங்களைக் கொடுக்க எதிர்பார்த்திருக்கும் குழுக்களுக்கு அது அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துவிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.நாட்டை அதிகமாக நேசிப்பதாகக் கூறும் இந்த அரசாங்கம் உண்மையிலேயே நாட்டை நேசிப்பதானால் நாட்டு மக்களை நேசித்து அவர்களை வாழ்விக்கக்கூடிய வழிவகைகளைச் செய்ய வேண்டும். ஆனால் அது நடைபெறாமல் உள்ளது. ஆகையால் யுத்தத்தை வெற்றிகொண்ட இலங்கையில் மக்களை வாழ்விப்பதற்கான யுத்தத்தையும் வெற்றிகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டை நேசிக்கின்ற இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் எதிர்பார்ப்பது ஜனநாயகத்தைத்தான். அதாவது பேச்சுச் சுதந்திரம், விரும்பிய மதத்தை பின்பற்றுகின்ற சுதந்திரம் மற்றும் தமது விருப்பத்தின்படி அரசியலில் ஈடுபடும் சுதந்திரம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்தச் சுதந்திரமானது இன, மத, மொழி மற்றும் கட்சி பேதங்களின்றி அனைவரும் அனுபவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

இன்று நாட்டில் நடக்கின்ற செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது ஜனநாயகம் கேள்விக்குறியாகி மக்களின் அனைத்துச் சுதந்திரங்களும் படிப்படியாக பறிக்கப்படுகிறது. தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டு அழுத்தங்களைப் பிரயோகிக்க எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அது வாய்ப்பை அதிகரிக்கும்.

மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளின்போது இன, மத, மொழி மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கருத்திற்கொள்ளாது எல்லோரும் எமது நாட்டு மக்களே என்ற நிலைப்பாட்டில் செயற்பட வேண்டும்.

நாட்டை நேசிப்பதாகக் கூறும் இந்த அரசாங்கம் நாட்டு மக்களை கவனத்தில் கொள்ளாது தான்தோன்றித்தனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே நாட்டு மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சினைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான யுத்தத்தினை மேற்கொண்டு அவர்களைக் காப்பாற்ற வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply