கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கும் ஜயலலிதாவின் முயற்சி படுதோல்வி
கச்சதீவு தமிழ்நாடு மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ள போதிலும் கச்சதீவு உரிமை பற்றி வெளிநாடுகளுடன் பேசும் அதிகாரம் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு மாத்திரமே இருக்கின்றது. தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எப்போதும் மற்றவர்களின் விவகாரத்தில் மூக்கை நுழைத்து பிரச்சினைகளை உருவாக்குவதில் வல்லவராக இருக்கிறார். அவர் கச்சதீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது. அதனை நாம் வென்றெடுக்க வேண்டுமென்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு பிரேரணையை நிறைவேற்றி இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொண்டுவரும் முயற்சியல் இப்போது இறங்கியிருக்கிறார்.ஜெயலலிதாவின் இந்த கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் நாசுக்காக நிராகரித்து, கச்சத்தீவை பற்றிப் பேசுவது இப்போது அவசியமில்லை. மீனவர் பிரச்சினையை நாம் முதலில் தீர்த்து வைக்க வேண்டுமென்று ஜெயலலிதாவுக்கு ஒரு பதிலை அனுப்பி வைத்துள்ளது.
ஜெயலலிதா அம்மையார் ஒரு சிறந்த நடிகை. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தமிழ்த்திரையுலகில் தன்னிகரற்ற தாரகையாக விளங்கியதை நாம் இன்றும் பாராட்டுகிறோம். நடிப்புத்துறையில் வல்லவரான செல்வி ஜெயலலிதா, அரசியலிலும் இப்போது நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இவரது அரசியல் நாடகத்தின் நடிப்புத்திறனை, தமிழ்நாட்டு மக்கள் அங்கீகரிக்க மறுக்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியின் கீழ் இலங்கையிலிருந்து வந்த பெளத்த பிக்குமார் அவரது குண்டர்களால் தாக்கப்பட்டதனால் தான் இன்று இலங்கையர் சென்னை மாநகரத்துக்கு வருவதை கூடியவரை தவிர்த்துள்ளனர். இதனால் சென்னையின் வர்த்தகம் ஓரளவு பின்னடைவை எதிர்நோக்கியிருக்கிறதென்று சென்னையில் உள்ள நகை வியாபாரிகளும், புடவை வர்த்தகர்களும், ஹோட்டல் முதலாளிமாரும் தங்கள் அதிருப்தியை ஜெயலலிதாவின் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.
ஜெயலலிதா அரசியல் நடத்துவதை நாம் எதிர்க்கப் போவதில்லை. ஆயினும், அவர் தனது அதிகார மோகத்தில் இலங்கை இந்தியாவுக்குமிடையில் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் நல்லுறவை சீர்குலைத்துவிடக்கூடாது என்று நாம் அவருக்கு அறிவுறுத்த விரும்புகிறோம் என்று இந்திய வர்த்தகர்கள் ஏகோபித்த கருத்தொன்றை இப்போது வெளியிட் டுள்ளார்கள்.
இந்தியப் பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அந்நாட்டின் அரசியல் கட்சிகள் ஒவ்வொன் றும் தங்கள் வாக்குப்பலத்தை அதிகரிப்பதற்கு புதுப்புது சர்ச்சைகளை கிளப்பி மக்களின் ஆதரவை பெறுவதற்கு எத்தனிப்பதை எவரும் தவறென்று கூறமாட்டார்கள்.
அதே வழியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும் தனது செல்வாக்கையும் அரசியல் அதிகாரத்தையும் பெருக்கிக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். முதலில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணையை இந்திய மத்திய அரசாங்கம் முழுமையாக ஆதரித்து இலங்கை அரசாங்கத்தை நிலைதடுமாற வைக்க வேண்டுமென்று அவர் எடுத்த முயற்சியும் படுதோல்வியில் முடிவடைந்தது.
அடுத்தபடியாக தமிழ்நாட்டுக்கு செல்லும் இலங்கை யாத்திரிகர்களை குறிப்பாக பெளத்த பிக்குமாரை தாக்கியாவது பிரச்சினையை விஸ்வரூபம் எடுக்கச் செய்ய வேண்டுமென்று ஜெயலலிதா எடுத்த முயற்சியையும் இந்திய மத்திய அரசாங்கம் சாதூர்யமாக அடக்கிவிட்டது.
இதனால் செய்வதறியாது அரசியலில் தனித்துவிடப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் செல்வி ஜெயலிலதா இன்னுமொரு அரசியல் நாடகத்தை சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டு சட்ட சபையில் மேடையேற்றினார்.
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்த கச்சதீவை இந்தியர்களாகிய நாம் மீட்டெடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா முன்மொழிந்து அதனை நிறைவேற்றினார்.
கச்சதீவின் வரலாற்றை இவ்வேளையில் நாம் சற்று ஆராய்வது நல்லது. கச்சதீவு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகில் உள்ள ஒரு தீவாகும். இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ளது. 1974ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 285 ஏக்கர் நிலப்பரப்புடைய கச்சதீவு, இந்திய இலங்கை அரசாங்கங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு சொந்தமானதென்று பிரகடனம் செய்யப்பட்டது.
இத்தீவில் மனிதர்கள் எவரும் வசிப்பதில்லை. அதற்கு காரணம் அங்கு தூய்மையான குடிநீர் இல்லாததேயாகும். ஆயினும் கடற்றொழிலாளர்களின் காவல் தெய்வமான புனித அந்தோனியாரின் ஆலயம் ஒன்று அங்கு இருக்கிறது.
கச்சதீவின் வரலாற்றை பின்னோக்கி பார்ப்போமேயானால் கி.பி. 1605ம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலப்பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித்தீவு, இராமசாமித்தீவு, மன்னாலித்தீவு, கச்சதீவு, நடுத்தீவு, பள்ளித்தீவு ஆகிய தீவுகளும் 69 கடற்கரை கிராமங்களும் சேதுபதி அரசர்களுக்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.
தளவாய் சேதுபதி, காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622- 1635) காலத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்துக்கு உட்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் 1803ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தார் முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச குடும்பத்தின் வாரிசான முத்துலிங்க சேதுபதி என்ற மன்னர் பல்லாண்டு காலம் சிறையில் இருந்து 1795ல் மரணமானார். அதனால் அவருடைய மூத்த சகோதரியான ராணி மங்களேஸ்வரி நாச்சியாரை கிழக்கிந்திய கம்பனியினர் ஜெமீன்தாரணியாக்கினார்கள். அவர் 1803முதல் 1812வரை நிர்வாகம் செய்தார். இந்தப் பின்னணியில் பிரிட்டனின் விக்டோரியா மகாராணி கச்சதீவு இராமநாதபுரம் ஜெமீனுக்கு உரித்தானதென்று ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். இதுதான் கச்சதீவின் பூர்வீக வரலாறு.
1974ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கச்சதீவு தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு இலங்கைக்கு சொந்தமாக இந்திய மத்திய அரசினால் கொடுக்கப்பட்டது. இப்போது ஜெயலலிதா இந்த ஒப்பந்தம் இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ்சபையினாலும், மேல்சபாவினாலும் அங்கீகரிக்கப்படாத காரணத்தினால் கச்சதீவு இந்தியாவுக்கே சொந்தமானதென்று தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
1974ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய மீனவர்களுக்கு கச்சதீவை அடுத்துள்ள கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்திய மீனவர்கள் விரும்பினால் தங்கள் வலைகளை கச்சதீவில் காயவைப்பதற்கும் அங்குள்ள பரிசுத்த அந்தோனியார் தேவாலயத்தில் ஆராதனை செய்வதற்கும் மாத்திரம் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆயினும் 1976ம் ஆண்டில் சர்வதேச கடல் எல்லை ஒப்பந்தத்தின் கீழ் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு கச்சதீவில் தங்கியிருப்பதற்கோ அவர்களின் மீன்பிடி வலைகளை காயவைப்பதற்கோ, அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று வழிபடுவதற்கோ தடை விதிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் புனித அந்தோனியார் தேவாலய பூஜைகளில் கலந்து கொள்வதற்கு இந்தியர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
பயங்கரவாத யுத்தத்தின் போது பயங்கரவாதிகள் ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து கச்சதீவு மார்க்கமாக இலங்கைக்கு கடத்திவருவார்கள் என்ற காரணத்தினால் எமது கடற்படையின் கண்காணிப்பு கச்சதீவு பிரதேசத்தில் அதிகரிக்கப்பட்டது.
இதனடிப்படையிலேயே தமிழ்நாடு மாநில அரசாங்கம் முடிந்து போன கச்சதீவு பிரச்சினையை மீண்டும் கிளப்பி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்ற நிலைக்கு முயற்சி செய்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply