மலேசியப் பொதுத்தேர்தல்: எண்பது சதவீத வாக்குப் பதிவு
மலேசியாவில் ஞாயிறன்று நடந்துள்ள பொதுத் தேர்தலில் இதுவரை இல்லாத அதிக அளவில் மக்கள் திரண்டு வாக்களித்துள்ளனர்.பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் சுமார் எண்பது சதவீதமானோர் வாக்களித்திருப்பதாகத் தெரிகிறது என மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மலேசியாவை ஐம்பது வருடங்களுக்கும் அதிகமாக ஆண்டுவருகின்ற ஆளுங்கூட்டணித் தரப்பிலும் சரி, அன்வர் இப்ராஹிம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி தரப்பிலும் சரி, புதிதாக சில இடங்களை அவர்கள் கைப்பற்றியிருப்பதாகவும், தம் வசம் இருந்த தொகுதிகளில் சிலவற்றை இழந்திருப்பதாகவும் ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.பாரிசான் தேசியக் கூட்டணி முன்னெப்போதுமில்லாத கடும் போட்டியை இம்முறை சந்திக்கிறது.
அரசாங்கத்தின் ஊழல், எதேச்சதிகாரம், இனரீதியான பாரபட்சம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிக் கூட்டணி பிரச்சாரம் செய்து பெருமளவில் மக்கள் ஆதரவைத் திரட்டியிருந்தது.
ஆனாலும் தேசியக் கூட்டணிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் நஜீப் ரஸாக் கூறுகிறார்.
பாரிசான் தேசியக் கூட்டணி ஆட்சியில் மலேசியா தொடர்ந்து பொருளாதார முன்னேற்றம் கண்டுவந்துள்ளது என்ற வாதத்தையும், எதிர்க்கட்சியினர் வெற்று வாக்குறுதிகளை அளிக்கிறார்கள் அவர்களால் தம்மைப்போல் நல்லாட்சி வழங்க முடியாது என்ற வாதத்தையும் முன்னிறுத்தி ஆளுங்கூட்டணி களம் நின்றது.
வாக்குப் பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணப்படுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply