காணி பொலிஸ் அதிகாரங்களை நீக்குவது குறித்து தீர்மானமில்லை: தினேஷ் குணவர்த்தன
வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிடவேண்டும் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.எது எவ்வாறெனினும் தற்போதைய அரசியலமைப்பில் காணப்படுகின்ற ஏற்பாடுகளுக்கு அமைவாக செயற்படவேண்டியது தேர்தல் செயலகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் ஏற்கனவே வடக்கில் வாழ்ந்த தற்போது வெளி மாகாணங்களில் வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் வடக்குத் தேர்லில் வாக்களிக்க முடியுமான வகையில் தேர்தல்கள் ஆணையாளர் ஏற்பாடுகளை செய்யவேண்டியது அவசியமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிடவேண்டும் என்றும் இல்லாவிடின் அரசாங்கத்திலிருந்து விலகவும் தயங்கமாட்டோம் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்திருந்தமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிடவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவும் குறிப்பிட்டிருந்தது.
அந்த வகையில் வடக்குத் தேர்தலுக்கு முன்னர் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கபபட்டுவருகின்ற நிலையில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்
வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் தெளிவான முறையில் அறிவித்துள்ளது. இந்நிலையில் அது குறித்து எவரும் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை. ஆனால் வடக்கில் வாக்காளர் இடாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் ஆளும் பங்காளிக் கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணி என்ற வகையில் எமக்கும் பிரச்சினை உள்ளது.
அதாவது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களில் பலர் இன்னும் வேறு மாகாணங்களில் தற்காலிகமாக வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் பலர் 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படாமலேயே உள்ளனர்.
எனவே இவ்வாறு வடக்கு மாகாணத்திலிருந்து தற்காலிகமாக இடம்பெயர்ந்து வேறு மாகாணங்களில் வசிக்கும் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் வடக்குத் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்பதனை நாம் கோரிக்கையாக தேர்தல் ஆணையாளருக்கு முன்வைக்கின்றோம்.
இதேவேளை வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிடவேண்டும் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை.
அவ்வாறு ஆராய்வதற்கான எவ்விதமான கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தனது யோசனையை அரசங்கத்துக்கு முன்வைத்துள்ளார். அதுபோன்று வேறு சில கட்சிகளும் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து தமது யோசனைகளை முன்வைத்துள்ளன.
மக்கள் ஐக்கிய முன்னணி என்ற வகையிலும் மாகாண சபை முறைமை அவசியமில்லை என்று நானும் அரசாங்கத்துக்கு யோசனை முன்வைத்துள்ளேன். அதுபோன்று பல கட்சிகளும் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன. ஆனால் இந்த விடயம் குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றேன்.
அவ்வாறு அரசியலமைப்பு மாற்றம் குறித்து முடிவு எடுக்கவேண்டுமாயின் அது பாராளுமன்றத்தினாலேயே எடுக்கப்படவேண்டிய விடயமாகும். அனைத்துக் கட்சிகளும் கூடி ஆராய்ந்து இது தொடர்பில் தீர்மானிக்கவேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply