தடை காலத்தில் யாரையுமே மீன் பிடிக்க அனுமதிக்கக் கூடாது: கருணாநிதி
மீன் பிடி தடை காலத்தில் செல்வாக்கு உள்ளவர்களை மட்டும் மீன் பிடிக்க அனுமதிப்பதைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 30 பேர், எப்படியும் இந்த முறை விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்த நேரத்தில், மூன்றாம் முறையாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் மே 6-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்த முறையாவது விடுவிப்பார்கள் என்றிருந்த நிலையில் திங்கள்கிழமை மீண்டும்
மே 20-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. காவல் நீட்டிப்புக்கு நீதிபதி சொல்லியிருக்கும் காரணம், மீனவர்கள் கைது தொடர்பாக போதுமான ஆவணங்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கல் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினர் ஆவணங்களைத் தாக்கல் செய்யாதது யாருடைய குற்றம்? இலங்கை அரசின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையை மத்திய அரசு இனியாவது கொண்டு சென்று, ராமேசுவரம் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
ராமேசுவரம் மீனவர்கள் மட்டுமல்லாமல் ஏப்ரல் 5-ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, புதுவை காரைக்காலைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, ஊர்க்காவல் துறை நீதிமன்றத்திலே ஆஜர்படுத்தி அவர்களையும் சிறையிலே அடைத்துள்ளனர்.
நீதிமன்றம் அவர்களை மே 29-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டு அவர்களும் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களின் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும். மீன் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே சுரண்டக்கூடிய வகையில் செல்வாக்கு படைத்த சிலர் மட்டும் தொழில் ரீதியான மீன் பிடிக் கப்பல்களைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய எல்லைக்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதை தென்னிந்திய மீனவர்கள் சங்கம் கண்டித்துள்ளது.
மீன் உற்பத்தியை மனதிலே கொண்டு, தமிழக மீனவர்கள் எல்லாம் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் சிலருக்கு மட்டும் மீன்பிடிக்க அனுமதி அளித்திருப்பது என்பது சாதாரண, சாமானிய மீனவர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய செயல் அல்லவா?
இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தற்போது செல்வாக்குள்ள சிலர் மட்டும் மீன் பிடிக்க அனுமதி அளித்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply