அசாத் சாலி முஸ்லிம் மக்களை ஆயுதப் போராட்டத்திற்கு கொண்டு செல்ல போவதாக தெரிவித்ததாலேயே கைது
தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்பு ஒன்றுடன் இணைந்து இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்களை ஆயுதப் போராட்டத்திற்கு கொண்டு செல்ல போவதாக அசாத் சாலி தெரிவித்திருந்தமை தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்த தகவல்களின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த பின்னணி குறித்து தெரியாமலேயே ஹக்கீம் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அசாத் சாலியின் கைது பற்றி பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார். அசாத் சாலி கைதுசெய்யப்பட்டமை குறித்து அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் போர் காரணமாக 30 வருடம் துயரங்களை அனுபவித்த இலங்கை மக்களுக்கு மீண்டும் அவ்வாறாதொரு நிலைமை ஏற்படாது தடுக்க வேண்டியது தனது கடமை எனவும் அப்படியான ஒன்று ஏற்பட போகும் என்பதை அறிந்து பாதுகாப்புச் செயலாளர் தூங்கி கொண்டிருந்தாரா என்பதை சிலர் தன்னிடம் கேட்பதற்கு முன்னர், அதற்கு இடமளிக்காது நாட்டை நேசிக்கும் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில், நாட்டுக்கு பொறுப்பு கூறும் கடமை தனக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புக்காகவும் நாட்டின் பொறுப்புக்காகவும் தான் தொடர்ந்தும் தயார் நிலையில் இருந்து வருவதாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார். அசாத் சாலி எதற்காக கைதுசெய்யப்பட்டார் என்பதை அறியாது சிலர் பேசி வருகின்றனர். முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்து பேசியதால் அவர் கைதுசெய்யப்பட்டதாக முஸ்லிம் மக்கள் நினைத்தனர்.
அசாத் சாலி வெறுமனே தமிழகத்திற்கு செல்லவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனும், திறந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் தமிழ் பேராசிரியர் ஒருவருடனும் அவர் தமிழகத்திற்கு சென்று, தமிழ் அமைப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழ் மொழி பேசும் முஸ்லிம் மக்களை அமைப்பொன்றில் இணைந்து ஆயுதப் போராட்டம் ஒன்றில் ஈடுபடுத்துவது குறித்து பேசியுள்ளார்.
பிரித்தானியாவில் இருக்கும் தமிழர் பேரவை விடுதலைப்புலிகளின் கைபாவை. அந்த அமைப்புக்கும் தமிழகத்தில் உள்ள அமைப்புகளுக்கும் தொடர்புள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் மக்களை இணைத்து கொண்டு இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. தமிழகத்தில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தைகளை இலங்கையில் போராட்டமாக மாற்ற இடமளிக்க போவதில்லை எனவும் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply