மூழ்கடிக்கப்பட்ட கப்பலிலிருந்த பொருள்கள் இறக்கப்பட்டன

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் சேதமடைந்த கப்பலிலிருந்து பொருள்கள் இறக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. 
 
ஒக்டோபர் 22ஆம் திகதி அதிகாலை காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்ற றுகுணு மற்றும் நிமல்லவ ஆகிய சரக்குக் கப்பல்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்தக் கப்பலில் நிமல்லவ கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடலில் மூழ்கிய கப்பல் கடற்படையினரால் கரைக்கு இழுத்துவரப்பட்டு அதிலிருந்த பொருள்கள் இறக்கப்பட்டிருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலிருந்த சீமெந்து உள்ளிட்ட பொருள்கள் இறக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இடமொன்றில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

காங்கேசன்துறை துறைமுகத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகத்திலிருந்து இறக்கப்படும் பொருள்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் முன்னர் தனியார் லொறி ஓட்டுநனர்களால் ஓட்டிச் செல்லப்பட்டன. எனினும், விடுதலைப் புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பொருள்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் கடற்படையினரால் ஓட்டிச்செல்லப்பட்டு பின்னரே உரிய லொறிச் சாரதிகளிடம் கையளிக்கப்படுவதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply