பிள்ளையாரடியில் புத்தர சிலை வைப்பதில் பிடிவாத் பிடிக்கும் தேரர்
மட்டக்களப்பு நகரில் (வடக்கு பிரதான நுழைவாயில்) பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை வைப்பதற்கு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தான் கொழும்பு மேல் நீதிமன்றத்தை நாடப் போவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமன ரத்தன தேரர் தெரிவிக்கின்றார். குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிராக கடந்த புதன்கிழமை அந்தப் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலிஸார் முன்வைத்த அறிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், அதற்கான வேலைகளுக்கு தடை விதித்தது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அம்பிட்டியே சுமனரத்ன தேரர், ´ஏற்கனவே பிள்ளையாரடி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஒரு புத்தர் சிலை உள்ளது. அந்த சிலை இப்போது உடைந்து சேதமடைந்து காணப்படுகின்றது. அந்த சிலை நிறுவப்பட்டுள்ள இடம் தனியார் காணி என்பதால் புனரமைப்பு செய்வதில் பிரச்சினைகள் உள்ளன. இதன் காரணமாகவே அந்த இடத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் குறித்த இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது´ என்றார்.
மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்குரிய தூரம் மற்றும் செல்லும் வழியை காட்டும் அறிவித்தலுடன் அந்த இடத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதி கேட்டுள்ள போதிலும் அதற்கான அனுமதி இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகின்றார்.
பௌத்த மக்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளுர் மக்களும் இணைந்து நடத்திய ஆர்பாட்டம் தொடர்பாக அவரிடம் கேட்ட போது, ´இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. எங்களால் புத்தர் சிலை வைக்கமுடியாமல் போனால் வேறு யாரால் வைக்க முடியும்´? என்று கூறினார்.
நாட்டில் 10 தமிழ்க் குடும்பங்கள் வாழும் இடங்களில் கூட உயரமான இந்து ஆலயங்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு நகர பிரதான நுழைவாயிலில் ஏனைய மதத்தவர்களும் விரும்பினால் தங்களது சமய அடையாளங்களுடன் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பாதை அறிவிப்புகளை அதே இடத்தில் நிறுவலாம் என்றும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்ததார்.
இதனிடையே, மட்டக்களப்பு நீதிமன்றம் புத்தர் சிலை வைப்பதற்கும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் ஏற்கனவே விதித்துள்ள தடை உத்தரவில் எதிர்வரும் 12ம் திகதி மங்களராமய விகாராதிபதியையும் சில உள்ளுர் மக்களையும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் பொலிஸ் ஊடாக அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply