வடக்கு வாக்காளர் பதிவு விசேட சட்டமூலம் மீது இன்று விவாதம்

இடம்பெயர்ந்த வட பகுதி வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று (6) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் மேற்படி வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை பிரதான தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வரவேற்றுள்ளன.

இதனூடாக யுத்தம் காரணமாக வாக்காளர் களாக தம்மை பதிவு செய்யாத சுமார் 18 ஆயிரம் பேருக்கு வாக்களிக்கும் உரிமை கிடை க்கவுள்ளதாக பெப்ரல் மற்றும் கபே ஆகிய அமைப்புகள் தெரிவித்தன. இதனை சகல கட்சிகளும் ஆதரவு அளித்து ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவை கோரியுள்ளன.

மேற்படி சட்டமூலத்தை வரவேற்பதாகக் கூறிய பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி, யுத்தத்தினால் தம்மை எங்கும் பதிவு செய்யாத வடபகுதி மக்களுக்கு தாம் முன்பிருந்த இடங்களில் வாக்களிக்க அவகாசம் கிடைப்பதாகக் கூறினார். மேற்படி சட்டமூலம் வடபகுதி வாக்காளர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் என கூறிய அவர் இதனை அமுல்படுத்த தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தமது அமைப்பு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடபகுதி இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமையை உறுதி செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தினூடாக மக்களின் இறைமை உறுதி செய்யப்படுவதாக கபே அமைப்பு தெரிவித்தது.

வடக்கில் வாழ்ந்த பெருமளவு மக்கள் பல காரணங்களால் இடம்பெயர்ந்தனர். சுமார் 15,000 பேர் நாட்டில் எங்கும் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்யவில்லை. இதனால் இவர்களுக்கு எந்தத் தேர்தலிலும் வாக்களிக்க முடியாதுள்ளது. அந்த மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை வரவேற்பதாகவும் கபே கூறியுள்ளது.

புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுவதனூடாக 18 ஆயிரம் பேருக்கு தம்மை வாக்காளர்களாக பதிய சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது என்று குறிப்பிட்டுள்ள மேற்படி அமைப்பு இதற்கு எதுவித எதிர்ப்புமின்றி சகல கட்சிகளும் ஆதரவளித்து நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளது.

இதனூடாக, வடபகுதி மக்களுக்கு எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடைக்கும் எனவும் கபே குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வடபகுதியில் அடையாள அட்டை இல்லாத சுமார் ஒரு இலட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக பப்ரல் அமைப்பு வடக்கில் நடமாடும் சேவை நடத்திவருகிறது.

வட மாகாண தேர்தலை இலக்குவைத்து நடத்தப்படும் இந்த வேலையினூடாக பெருமளவு மக்கள் பயனடைந்து வருவதாக பப்ரல் அமைப்பு கூறியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply