13ஆவது அரசமைப்புச் சட்டத்தை உருக்குலைக்கும் வகையில் இலங்கை அரசு செயற்படுகிறது

ராஜீவ்- ஜெயவர்த்தன ஒப்பந்தபப்டி நிறைவேற்றப்பட வேண்டிய 13ஆவது அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றாமல், அதை உருக்குலைக்கும் வகையில் இலங்கை அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழர்களின் குரலை இந்தியா அலட்சியப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.  இது குறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் போரின் கொல்லப்படும் சிங்கள இராணுவத்தால் குண்டு வீச்சு மூலம் இனப்படுகொலை செய்யபப்டும் பொது மக்களாகிய எஞ்சிய ஈழத் தமிழர்கள் பலரையும் கடத்திச் சென்று, காணாமற் போனவர்கள் பட்டியலில் சேர்த்தும் சிங்கள ஆட்சி அதிகாரம் நாளுக்கு நாள், வாழ்வுரிமையை ஈழத் தமிழர்களுக்கு அளிப்பதற்குப் பதிலாக அழிப்பதற்கே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசு – ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவோம் என்று கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லையே! ஏறத்தாழ – போர் முடிந்து நான்கு ஆண்டுகள் முடியும் தருவாயில், அவர்களுக்குள்ள அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்பட்டு வரும் நிலைதானே உள்ளது என்று ஏன் தட்டிக் கேட்காமல் வாய் மூடி மவுனியாக, இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.?

13வது அரசியல் சட்டத் திருத்தம் என்பதேகூட முறையாக செய்யப்படவில்லை. இலங்கை அரசு ஏற்கனவே இந்திய அரசுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு விட்டது. குறைந்தபட்ச அந்த உரிமைகள் கூட தரப்படாதது மட்டுமல்ல, ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதற்கொப்ப அதனையே அடியோடு பறித்திட இப்போது 13A என்ற ஒரு புதிய சட்டத் திருத்தத்தைக் கொணர்ந்துள்ளனர்.

விடுதலைப்புலிகளை வென்று விட்டோம் என்றும், தலைவர்களைக் கொன்று விட்டோம் என்றும் பெருமிதத்துடன் நாடு திரும்பிய நிலையில், ராஜபக்ஷ அரசு, இலங்கை மண்ணை முத்தமிட்டு, இனி இந்த நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற பிரச்சினையே கிடையாது என்று கூறினாரே, அதற்குப் பொருள் என்னவென்பது, இப்போது இத்தகைய உரிமைப் பறிப்புகளின் மூலம் வெளிச்சம் போட்டுத் தெரிவிக்கவில்லையா?

ஒற்றைச் சர்வாதிகார ஆட்சி – எஞ்சிய தமிழர்கள் எல்லாம் அங்கே போரில் சிறைப்பிடிக்கப்பட்ட வெளிநாட்டுக் கைதிகளை நடத்துவதுபோலவும், எந்த உரிமைகளும் இல்லாத கொத்தடிமைகளாகவும் தான் இருப்பார்கள் என்று பிரகடனப்படுத்துகிறார்களே – சிங்கள கூட்டத்தினர்.

உலகம் இதனை வேடிக்கை பார்க்கலாமா? நான் தமிழர்களுக்கு எதிராகப் போர் நடத்தவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக மட்டும்தான் போர் நடத்தி, மக்களைக் காப்பாற்றுகிறேன் என்ற ராஜபக்ஷவின் கூற்று எத்தகைய மாய்மாலம் – புரட்டின் உச்சம் என்பது இப்போதாவது புரிய வேண்டாமா – உலக நாடுகளுக்கும் இந்திய அரசுக்கும்?  அங்கே உள்ள தமிழர்களின் பிரதிநிதிகள் குரலைக் கூட கேட்டு, குறைந்தப்பட்ச உரிமைகளைக்கூட எம் தமிழர்களுக்குத் தர அந்நாட்டு சிங்கள அரசு தயாராக இல்லை.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் சிங்கள இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்க மாட்டோம் என்று கூறி, சாமர்த்தியமாக இங்குள்ள தமிழர்களை ஏமாற்றலாமா மத்திய அரசு? இந்தியாவின் இதர மாநிலங்களில் நாங்கள் பயிற்சி தருவோம் என்றுதானே சொல்லாமற் செய்கின்றது – மத்திய அரசும், அதன் இராணுவ அமைச்சும்?

தமிழ் இன அழிப்பு வேலைக்கு தமிழ்நாடு அல்லாத மாநிலங்களில் சிங்கள இராணுவப் படைக்குப் பயிற்சி தந்து அழிக்கலாமா? அது சரியா?

இந்த நிலையில், அரசியல் தீர்வு எதையும் செய்யாதது மட்டுமல்ல, ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தன ஒப்பந்தம் என்ற ஒன்றை ஒப்புக்காகக்கூட செயல்படுத்துகிறோம் என்று சொல்லி, 13வது திருத்தத்தை 13A என்ற புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் பறிக்கும் – அல்லது ரத்து செய்யும் நிலைக்கே சென்று கொண்டுள்ளதை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது நியாயமில்லை.

இந்த நியாயமான கோரிக்கைகளை இந்திய அரசு அலட்சியப்படுத்தி, எங்களுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள், உலகத் தமிழர்கள் குரலும், உலக மனிதநேயர்களின் கோரிக்கையும் முக்கியமல்ல என்று கூறு அலட்சியப்படுத்திப் போகிறதா?

தெளிவுபடுத்த வேண்டியது அவசரம் – அவசியம் அல்லவா?

வெறுமனே 1000 கோடி ரூபாய் அளிப்பு 7ம் இராணுவப் பயிற்சியும் தமிழ் இனத்தை வாழ வைக்கவா? அழிக்கவா?

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply