23 ஆண்டுகளுக்கு முன் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான பள்ளிவாசல் புனரமைப்பு
இலங்கையில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான காத்தான்குடி பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டாலும், அப்போது ஏற்பட்ட அழிவுகளின் அடையாளங்கள் தொடர்ந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்தம் முறிவடைந்த காலத்தில், ஆகஸ்ட் மாதம் 3 தேதி இரவு காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசல் மீது விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்தச் சம்பவத்தின் போது இந்தப் பள்ளிவாசலில் மட்டுமல்லாமால் அதை அண்மித்த பகுதியிலுள்ள மற்றொரு மசூதியிலும் தொழுகையில் ஈடுபட்டிருக் கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 103 பேர் கொல்லப்பட்டனர்.
சிறார்கள் உட்பட பலர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டும் காயமுமடைந்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான பள்ளிவாசலில், அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் தொழுகை மண்டபத்தின் சுவர்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குதலின் தடயங்களும் அடையாளங்களும் இன்றளவும் காணப்படுகின்றன.
தாக்குதல் நடைபெற்ற பிறகும் அங்கு தொழுகைகள் தொடர்ந்து வந்தன.
இந்தப் பள்ளிவாசலை செப்பனிடும் பணிகள் தொடங்கினாலும், 23 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற அந்தத் தாக்குதலை நினைவு கூறும் வகையிலான அடையாளங்களும், தடயங்களும் அப்படியே அழியாமல் இருக்கும் வகையிலேயே பணிகள் இடம்பெறும் என்று அந்த பள்ளிவாசலின் நிர்வாக சபையின் செயலர் ஏ ஜே அனீஸ் அஹ்மட் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கையில் 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அழிவுகளையும், இழப்புகளையும் நினைவுபடுத்தும் வரலாற்றுச் சின்னமாகவே தாக்குதல் தடயங்களை தாங்கள் பாதுகாக்க விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.
போர் முடிவடைந்த நிலையில் போர்க்காலத் தடயங்களையும், அடையாளங்களையும் பேணிக் காப்பது இனங்களிடையே நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வுக்கு குந்தகமாக அமையலாம் என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர், அத்தடயங்களை பாதுகாப்பது எவ்வகையிலும், எந்தவொரு இனத்தின் மீதும் முஸ்லிம் மக்களின் விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக பார்க்கபடாது எனும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்.
இந்தத் தாக்குதல் இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவுகளில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இன்றளவும் ஒரு நெருடலாகவே இருந்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply