வடபகுதி தமிழ் மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கு முயற்சி!

வாக்காளர் பதிவு சட்டமூலத்தை அரசாங்கம் ஏன் அவசர அவசரமாக கொண்டுவருகின்றது. வடபகுதி தமிழ் மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கே தவிர வேறெதற்கும் அல்ல என ஐ.தே.கட்சி எம்.பி. ரி.எம்.சுவாமிநாதன் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாக்காளர் பதிவு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே ரி.எம்.சுவாமிநாதன் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் பலாத்காரமாக பறிக்கப்படுகின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே அரசு அவசர அவசரமாக வாக்காளர் பதிவுத் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அத்தோடு புதிதாக தேர்தல் முறைமையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் மேல் மாகாணத்தையோ, தென்மாகாணத்தையோ இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக வடபகுதி தமிழ் மக்களை இலக்குவைத்தே அவர்களது அரசியல் உரிமைகளை பறிக்கும் விதத்திலேயே இவை முன்னெடுக்கப்படுகின்றன. இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். அதனை நான் எதிர்க்கவில்லை.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் எவராகட்டும் இடம்பெயர்ந்திருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும். அது மக்களின் அடிப்படை உரிமையாகும்.

ஆனால், அவ்வாறான திருத்தமொன்றை இரண்டு மாதங்களாவது பேச்சு நடத்தி ஆராய்ந்து சரியான விதத்தில் கொண்டுவர வேண்டும். அதைவிடுத்து அவசர அவசரமாக கொண்டு வருவதையே எதிர்க்கின்றோம்.

இவ்விடயத்தை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனம் செலுத்துவதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply