சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கை தயார்: அமைச்சர் திஸ்ஸ வித்தாரண
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராயப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை தயாராகவிருப்பதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். நிறைவேற்று அதிகார முறையை ஒழித்தல் மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் முறையை மீண்டும் அமுல்படுத்தல் போன்ற பிரதான விடயங்கள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இலங்கையின் இனப்பிரச்சினை அரசியல் தீர்வின் மூலமே முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமென்பதில் அரசாங்கம் உறுதியாவிருப்பதால், தற்பொழுது நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் முடிந்ததும் அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே, புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வொன்று அமுல்படுத்துவதற்கான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய தீர்வுத்திட்டமொன்று தயாராக வைத்திருக்க வேண்டுமெனவும் கூறினார்.
முக்கியமான சிக்கலுக்குரிய விடயங்கள் பற்றி கடந்த இரண்டு வாரங்களாகக் கூடி ஆராய்ந்து சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மத்தியில் இணக்கப்பாடொன்று காணப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“ஆரம்பத்தில் அனைத்து அரசியல் கட்சிகளாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவர்களின் நிலைப்பாடுகள் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உசிதமானவையாக இருக்கவில்லை. ஆனால், தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியதாகவே தீர்வு இருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு” என்றார் பேராசிரியர்.
மத்திக்கும், மாகாணங்களுக்கும் இடையிலான அதிகாரங்களைப் பகிர்வு காரணமாக 13வது திருத்தச்சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் சிக்கல் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் சரியான முறையில் இயங்குவதற்கு தகுந்த பொறிமுறையின் ஊடாக மேலதிக நிதியுதவி வழங்கப்படும் என்றார் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply