சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது; ஒரு வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை!
இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈழத்தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப் பேசவந்த இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிதாக புதுச்சேரி போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தது.
இதைத்தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் போதே சீமான் சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் நடந்த ஈழதமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசினார்.
புதுச்சேரி போலீசார் சீமானை கைது செய்வதற்கு தமிழக போலீசாரின் உதவியை நாடியது.
தமிழக சட்டசபையில் சீமான் ஏன் இன்னும் கைதாகவில்லை என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, இன்னும் 2நாட்களுக்குள் கைதாகிவிடுவார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சீமான் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக வக்கீல்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவரை கைது செய்வதற்கு புதுச்சேரி போலீசார் விரைந்துவந்தனர். ஆனால் அதற்குள் சீமான் தனது பேச்சு முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டார்.
புதுச்சேரி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. அச்சமயம், தானே நேரில் வந்து ஆஜராவதாக சீமான் அறிவித்தார்.
அதன்படி நெல்லை காவல்துறை ஆணையர் முன்பு சீமான் நேரில் ஆஜரானார். நெல்லை காவல்துறை ஆணையர் சீமானை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி நீதிமன்றத்தீர்ப்பின் படி அங்கே காலாப்பட்டு மத்தியசிறையில் அடைக்கப்பட்டார் சீமான்.
பாளையங்கோட்டையில் பேசியபோதும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நெல்லை போலீசாரும் சீமான் மீது வழக்கு தொடர்ந்தது.
க்ரைம் நம்பர் 308/2009, இந்திய தண்டனை சட்டம் 505, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 13(1), (B), 13(2) ஆகிய சட்டப்பிரிவுகளில் காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில் இன்று, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் தமிழக அரசின் உத்தரவை புதுச்சேரி சிறையில் இருக்கும் சீமானிடம் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் வழங்கினார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் சிறையில் அடைக்கப்படுவதால் அவர் 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபடும் எண்ணத்தில் இருந்தார் சீமான். இந்த நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply