புலிகளின் அறிவிப்பைப் பயன்படுத்தி அரசாங்கம் யுத்த நிறுத்தம் செய்ய வேண்டும் : இந்திய வெளிவிவகார அமைச்சர்

யுத்த நிறுத்தத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முன் வந்திருப்பதனை இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டு, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று  வேண்டுகோள் விடுத்தார்.

தூத்துக்குடியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து அமைக்கவுள்ள அனல் மின் நிலையத்துக்கான அடிக்கல் நடும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் தினம்தோறும் இடம் பெறும் சம்பவங்கள் இந்தியாவுக்கு மிகுந்த கவலையளிக்கிறது. இலங்கையின் வடக்கில் சண்டை இடம்பெறும் பகுதிகளில் 70 ஆயிரம் அப்பாவி மக்கள் சிக்கித் தவிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதியில் உணவு, குடிநீர், மருந்து வகைகளுக்குப் பலத்த தட்டுப்பாடு நிலவுகிறது. அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் வாழும் அப்பாவி மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றுவது குறித்து இந்தியா தனது கவலையைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

யுத்த நிறுத்தத்துக்கு விடுதலைப் புலிகள் முன்வந்திருப்பதாகத் தகவல்கன் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் இந்த முடிவு ஆயுதங்களை கீழே போடும் அறிவிப்பை விடக் குறைவான விருப்பம்தான். இருப்பினும் இந்த வாய்ப்பை இலங்கை அரசு சரியாகப் பயன்படுத்தி அங்கு நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

சண்டை நடைபெறும் பகுதிகளிலிருந்து அப்பாவி மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் வகுக்க வேண்டும். இதற்கு விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பு அவசியம்.

சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் போர் நடைபெறும் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வசதியாக இருக்கும்.

சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் மருத்துவம் உட்பட அனைத்து வசதிகளையும் செய்யக் கூடியதான வசதியான இடத்துக்கு அவர்கள் வெளியேற வேண்டியது அவசியமாகும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply