ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சவால்களை எதிர்கொள்ளத் தயார் :மஹிந்த சமரசிங்க
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. இலங்கைக்கு எப்போதும் உதவி செய்துவரும் சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகள் இம்முறை ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் இடம்பிடிக்கின்றமையின் காரணமாக எமக்கு வலுவான நிலைமை மனித உரிமை பேரவையில் காணப்படுகின்றது என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார். அந்த அறிக்கையை பார்த்த பின்னரே இலங்கை தனது அறிக்கையை முன்வைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி மைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் தயார் நிலை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
இம்முறை மனித உரிமைப் பேரவை அமர்வில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளமையின் காரணமாக அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகிவருகின்றது. அந்த அறிக்கை எவ்வாறு அமையும் என்று எங்களுக்கு தெரியாது.
மனித உரிமைப் பேரவையில் நவநீதம் பிள்ளையின் அறிக்கையை பார்த்த பின்னர் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே எமது அறிக்கை அமையும்.
யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையை பொறுத்தமட்டில் இலங்கையானது பல்வேறு வகையான முன்னேற்றங்களை வெளிப்படுத்திவருகின்றது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் செயற்பாட்டில் பாரிய முன்னேற்றத்தைக் காட்டியுள்ளோம்.
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னரும் பாரிய முன்னேற்றங்களை வெளிப்படுத்த எதிர்பார்க்கின்றோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அமுல்படுத்திவருகின்றோம். பாதிக்கப்பட்ட வடக்கு பிரதேசங்களில் பாரிய முன்னேற்றங்களை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில், யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையில் நாங்கள் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளமையின் காரணமாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் எவ்வகையான சவாலையும் எதிர்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றோம். இலங்கை தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிப்போம்.
குறிப்பாக இம்முறை மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் இடம்பெற்றுள்ளன. விசேடமாக சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் எமக்கு உதவி செய்யும் நாடுகளாக உள்ளன. எனவே அந்த நாடுகளின் பிரசன்னம் எமக்கு வெகுவான வலுவை மனித உரிமைப் பேரவையில் அளித்துள்ளது.
எனவே நாங்கள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடருக்கு தயாராகிவருகின்றோம். எவ்வகையான நிலைமையையும் சவாலையும் எதிர்கொள்ளவும் தயாராக உள்ளோம். காரணம் பாரியளவில் முன்னேற்றங்களை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.
இம்முறை மனித உரிமைப் பேரவையின் 25ஆவது கூட்டத் தொடருக்கு இலங்கையிலிருந்து பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தலைமையில் அமைச்சர்கள் மட்ட தூதுக்குழு கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் 25 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பான தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
நவநீதம் பிள்ளை கடந்த வருடம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் நாட்டின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மதிப்பீடுகளை மேற்கொண்டிருந்தார்.
அத்துடன் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அந்தவகையிலேயே அவர் இலங்கை தொடர்பான அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இது இவ்வாறு இருக்க ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் டாக்டர் சலோகா பெயானி இம்மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளின்போது இலங்கை தொடர்பாக பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply