எகிப்தில் இன்றைய கார் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி: முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் திவிரவாத அமைப்பாக அறிவிப்பு
எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை சேர்ந்த முகமது மோர்சி மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி கடந்த ஜூலை மாதம் அவரது ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மோர்சியின் ஆதரவாளர்களும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்களும் மீண்டும் மோர்சியின் ஆட்சியை நிலைநிறுத்தும் முயற்சியில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.அவர்களை கலைக்க முயன்ற ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
85 வருட காலமாக இயங்கி வரும் இந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை, முன்பு 1954-ம் ஆண்டு ராணுவ அரசு தடை செய்தது. இருந்தும் அவர்கள் அந்த இயக்கத்தை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகவும் பின்னர் அதில் ஒரு பிரிவினர் அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவு செய்துகொண்டனர்.
இதற்கிடையில், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தொடர்பான வழக்கு ஒன்றில் அந்த இயக்கத்தை தடை செய்து கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு பிறகு சகோதரத்துவ கட்சியை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் தீவிரமான வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வன்முறை சம்பவங்களில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர்.
இந்நிலையில், எகிப்தின் வடக்கு பகுதியின் மன்சவ்ரா நகரில் உள்ள பாதுகாப்பு படை அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் இன்று காலை அதிரடி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் நிரப்பிய காரை அந்த கட்டிடத்தின் மீது மோதச் செய்து வெடிக்க வைத்ததில் 14 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் போலீசாரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
இதனையடுத்து, முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக அறிவித்தும் தடை விதித்தும் எகிப்து பிரதமர் ஹசீம் எல் பெப்லாவி இன்று உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply