திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி பற்றி சர்வதேச விசாரணை தேவை: ராயப்பு ஜோசப்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப்புதைகுழி தொடர்பான இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும், எனவே அது குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.

திருக்கேதீஸ்வரம் பகுதியில் வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான பணியில் ஈடுபட்டிடிருந்த பணியாளர்கள் நிலத்தைத் தோண்டிபொது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தைப் பார்வையிட்ட மன்னார் நீதவானின் உத்தரவுக்கமைய அந்த இடத்தைத் தோக்ண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மன்னார் நீதவான், சட்ட வைத்திய அதிகாரி மற்றும், காவல்துறையினர் முன்னிலையில் இந்தப் புதைகுழி தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது பத்து மண்டையோடுகளும் மனித எலும்புக்கூட்டு எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன் உத்தரவுக்கமைய அவைகள் இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டிருக்கின்றன.

கிறிஸ்மஸ் பண்டிகையையடுத்து டிசம்பர் 28 ஆம் தேதிவரை இந்த புதைகுழியைத் தோண்டும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மனிதப் புதைகுழி குறித்து கருத்து வெளியிட்ட மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், மன்னாரில் மட்டுமல்ல, வடக்கில் யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் இவ்வாறான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆயினும் அரச விசாரணைகளின் மூலம், அவைகுறித்த உண்மையான தகவல்கள் வெளிவரவில்லை.

குறிப்பாக செம்மணி பாரிய மனிதப் புதைகுழி நீதவான் ஒருவர் முன்னிலையில் தோண்டப்பட்டு, விசாரணைகள் நடைபெற்ற போதிலும், அங்கு புதைக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்பிலோ அல்லது யார் அந்த சடலங்களைப் புதைத்தார்கள், புதைக்கப்பட்டவர்கள் யாரால் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்ற உண்மைகளோ கண்டறியப்படவில்லை என்று மன்னார் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இலங்கை அரச விசாரணைகளில் தமக்கு நம்பிக்கை இல்லாதிருப்பதனால், திருக்கேதீஸ்வரம் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளியில் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply