சுனாமி பேரழிவின் ஒன்பது வருட நிறைவு: உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து இன்று அஞ்சலி

இலங்கை உட்பட ஆசியா கண்டத்தின் பல்வேறு நாடுகளில் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களைப் பலியெடுத்ததுடன் விலைமதிக்க முடியாத உடைமைகளையும் அழித்தொழித்த கடல்பூகம்பம் பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் ஒன்பது வருடங்கள் நிறைவு பெறுகின்றன.ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்ற டிசம்பர் 26ம் திகதியை இலங்கை அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தினமாகப் பிரகடனப்படுத்தி வருடம் தோறும் இன்றைய தினத்தில் இயற்கை அனர்த்த விழிப்புணர்வு முன்னேற்பாடு களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. சுனாமி சோக நினைவு அனுஷ்டிக்க ப்படும் இன்றைய தினமானது தேசிய பாதுகாப்பு தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆழிப்பேரலையில் உயிரிழந்த எமது மக்களை நினைவு கூர்ந்து இன்று காலை 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிட நேரம் நாடெங்கும் மக்கள் மெளனம் அனுஷ்டித்து நினைவஞ்சலி செலுத்துகின்றனர்.அதேசமயம் கடல்பூகம்பப் பேரலையினால் மோசமான அழிவுக்குள்ளான இலங்கையின் கடலோரப் பிரதேசங்களில் பரவலாக நினைவஞ்சலி வைபவங்கள் இன்று நடைபெறுகின்றன.

சுனாமியில் மரணமான உறவுகளின் ஆத்மசாந்திக்காக மதஸ்தலங்களில் இன்றைய தினம் விசேட பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு, கிளிநொச்சி மாவட்டத்தின் வெற்றிலைக்கேணி மற்றும் முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை, அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, களுத்துறை போன்ற மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களில் இன்றைய தினம் சுனாமியில் உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து வைபவங்களும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன.

இலங்கையில் ஆழிப்பேரலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை முப்பத்தோராயிரத்துக்கும் அதிகமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் தமிழ், முஸ்லிம், சிங்கள, பறங்கியர் ஆகிய அனைத்து இன மக்களும் உயிரிழந்துள்ளனர். வெளி நாடுகளிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் பலரும் இதில் பலியா கியிருந்தனர்.

சுனாமி மாத்திரமன்றி அனைத்து விதமான இயற்கை அனர்த்தங்கள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் முன்னேற்பாடும் ஏற்பட வேண்டுமென்பதற்கே இன்றைய தினத்தை தேசிய பாதுகாப்பு தினமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையில் பலியான ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று நினைவஞ்சலிப் பிரார்த்தனை நடைபெறுவதாக எமது பருத்தித்துறை குறூப் நிருபர் தெரிவிக் கிறார்.

பாண்டிருப்பு கிராமத்தில் 476 பேர் உயிரிழந்திருந்தனர். இவர்களின் நினைவாக பாண்டிருப்பில் நினைவுத் தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தூபியில் உயிரிழந்தவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஆலயங்களில் விசேட பூஜைகளும், அன்னதான வைபவமும் இடம்பெறுகின்றன. குறிப்பாக பாண்டிருப்பு மகா விஷ்ணு ஆலயத்தில் சபரிமலை ஐயப்ப சுவாமிகள் யாத்திரைக்கு குழுவினரால் மகரஜோதிப் பெருவிழாவும், ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.

பிற்பகல் 5.30 மணியளவில் உயிரிழந்தோரின் உறவினர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தவுள்ளனர் என்று எமது பாண்டிருப்பு தினகரன் நிருபர் தெரிவிக்கிறார். கல்முனையில் முன்னர் மாமாங்க வித்தியாலயம் அமைந்திருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக காலை 8.30 மணிக்கு மலர் மாலை வைத்து சுடர் ஏற்றி, விசேட பிரார்த்தனையில் மக்கள் ஈடுபடுகின்றனர். மணல் சேனை மயானத்திலும் நினைவுத்தூபிக்கு முன்பாக வழிபாடு நடைபெறுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply