பொது வேட்பாளராக சந்திரிகாவை களமிறக்குவது குறித்து தீர்மானமில்லை கூட்டமைப்புடன் பேசுகின்றோம்: ஐ.தே.க.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.எமது செயற்பாடுகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நாம் கவலைப்படவில்லை. ஜனநாயகத்தை விரும்புவோர் எம்முடன் கைகோர்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அடுத்த ஆண்டுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே எமது இலக்கு. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென நாம் தீர்மானிக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை வேட்பாளராக நிறுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் கட்சி எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை. எமது கட்சிக்குள்ளேயே சிறந்த தலைவர்கள் இருக்கின்றனர். மக்களினால் ஆதரிக்கப்பட்டு அதிகளவிலான மக்கள் வாக்குகளை பெறக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கும் நிலையில் பொது வேட்பாளர் தொடர்பில் இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி சிந்திக்கவில்லை.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை எதிர்பார்க்கின்றோம். ஜனநாயக ரீதியிலான ஆட்சியினை அமைத்து சகல இன மக்களுக்குமான ஆட்சியினை அமைக்க வேண்டுமாயின் அனைத்து இனங்களையும் பிரதிபலிக்கும் கட்சிகளின் ஆதரவு அவசியம்.
வடக்கு மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமேயாகும். ஆகவே இவ்விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சுமுகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு சிறுபான்மையினரின் ஆதரவினை பெற்றுக்கொள்வதே சிறந்ததாகும்.
ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வித முடிவுகளும் இன்னமும் எடுக்காத நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தினை கண்டிக்கின்றோம்.
இன்று மக்கள் விடுதலை முன்னணியினர் வலியுறுத்தி வருவதை ஐக்கிய தேசியக் கட்சி அன்றில் இருந்தே குறிப்பிட்டு வருகின்றது. ஜனாதிபதி அதிகார முறையினை இல்லாதொழித்து ஜனநாயக ஆட்சியினை நடைமுறைப்படுத்துவதே எமது கொள்கை. எமது ஆட்சியில் அதை நிச்சயமாக நடைமுறைப்படுத்துவோம்.
அதேபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியின் சர்வாதிகார அடக்கு முறை ஆட்சியில் இருந்து விடுபட்டு மக்கள் ஆட்சி வேண்டுமென ஆதரிக்கும் கட்சிகள் மட்டும் எம்முடன் இணையுங்கள். யார் எதிர்ப்புத் தெரிவித்தாலும் முரண்பாடுகளான கருத்துக்களை முன்வைத்தாலும் மக்கள் எம்முடனேயே இருக்கின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் ஆட்சியில் மக்கள் அதிருப்தி கண்டு விட்டனர். விலையேற்றத்திலும் பொருளாதார சிக்கலிலும் இருந்து விடுபட்டு அமைதியாக வாழவே இன்று மக்கள் முயற்சிக்கின்றனர். எனவே அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாகவே அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply