புத்தாண்டு எமது முயற்சிகளுக்கு வெற்றியைத் தர வேண்டும் ஜனாதிபதி புதுவருட வாழ்த்து
பிறந்திருக்கும் புத்தாண்டு அபிவிருத்தி தசாப்தத்தில் மேலும் பல கருத்திட்டங்களுக்கான வாயில்களை திறந்திருக்கின்றது. தேசத்தைக் கட்டியெழுப்பும்போது நாம் சகலவகையான வேறுபாடுகளையும் பிரிவினைகளையும் ஒதுக்கிவிட வேண்டும். பிறந்திருக்கும் இப் புத்தாண்டு தேசத்தின் அபிலாஷைகளை அடைந்துகொள்வற்கான எமது முயற்சிகளுக்கு வெற்றியைத் தரவேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அபிவிருத்திக்கான ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னர் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும் பெருமையுடன் நாம் இப்புத்தாண்டைக் கொண்டாடுகின்றோம். மிகுந்த அர்ப்பணத்துடன் நாம் அபிவிருத்தித் தசாப்தத்தில் காலடியெடுத்துவைத்துள்ளோம். புதிதாக, நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிவேக பாதைகள், விமான நிலையங்கள், மின்சார நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அலங்காரம் போன்றவற்றின் நன்மைகளை நீங்கள் ஏற்கனவே அனுபவித்து வருகின்றீர்கள். பிறந்திருக்கும் புத்தாண்டு அபிவிருத்தித் தசாப்தத்தில் மேலும் பல கருத்திட்டங்களுக்கான வாயில்களைத் திறக்கின்றது. இதன்மூலம் நீங்களும் உங்களது பிள்ளைகளும் எதிர்காலத்தில் இன்னும் பல நன்மைகளைப் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் தொடர்ந்தும் எம்மீது நம்பிக்கை வைப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
பிறந்திருக்கும் இப்புத்தாண்டு பொருளாதார அபிவிருத்தியிலும் அரசியல்துறையிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு ஆண்டாகும். தேசிய ஐக்கியம், சமாதானம், மனநிறைவு ஆகியவற்றைப் பேணிய நிலையிலேயே நாம் இத்திசையில் முன்னோக்கிச் செல்கிறோம். எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் உண்மையான தேசிய முன்னேற்றத்திற்கும் இதுவே சரியான பாதை என்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
தேசத்தினைக் கட்டியெழுப்புகின்ற போது நாம் எல்லா வகையான வேறுபாடுகளையும் பிரிவினைகளையும் ஒதுக்கிவிட வேண்டும். இதன் விளைவாகவே ஒரு புதிய அரசியல் மற்றும் அபிவிருத்திக் கலாசாரம் ஏற்படும். இதனை மேலும் உறுதிப்படுத்திய நிலையிலேயே நாம் இப்புத்தாண்டில் முன்னேறிச் செல்ல வேண்டும்.எமது மக்களுக்கு சுதந்திரத்தையும் சமாதானத்தையும் பெற்றுக்கொடுத்த நாம் அவர்களுக்கு அபிவிருத்தியையும் மகிழ்ச்சியையும் பெற்றுகொடுக்க அர்ப்பணத்துடன் உள்ளோம்.
பிறந்திருக்கும் இப்புத்தாண்டு தேசத்தின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான எமது முயற்சிகளுக்கு வெற்றியைத் தரவேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். உங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply