மன்னிப்பு கோராவிடின் பிரதமருக்கு எதிராக வழக்கு : ஜாதிக ஹெல உறுமய
ஓமல்பே சோபித தேரரை விமர்சித்ததை பிரதமர் ரி.எம். ஜயரத்ன கைவிட்டு மன்னிப்பு கோராவிடின் பிரதமருக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கும் ஜாதிக ஹெல உறுமய பாகிஸ்தான், பங்களா தேஷ், இந்திய நாட்டவர்கள் இலங்கை வருவதற்கான விசா தளர்வுகளை நீக்கி கடுமையாக்கப்பட வேண்டுமென்றும் அக்கட்சி தெரிவித்தது.பத்தரமுல்லையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய ஹெல உறுமயவின் தவிசாளரும், எம்.பி.யுமான அத்துருலியே ரத்ன தேரர். 262 கிலோ போதைப்பொருள் கொள்கலனை விடுவிக்கு மாறு பிரதமரின் இணைப்புச் செயலாளர் பிரதமரின் உத்தியோகபூர்வ கடிதத் தலையங்கத்தில் கடிதம் வழங்கிய சம்பவம் தொடர்பில் நாட்டுக்கு அம்பலப்படுத்திய எமது தலைவர் ஓமல்பே சோபித தேரர் ஆவார்.
எமது தலைவர் தேர்தல் உட்பட கட்சி நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை. மாறாக, நாட்டை பாதிக்கும் ஒவ்வொரு தேசிய பிரச்சினையிலும் தலையிட்டு அதற்கு வெற்றியும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
போதைப்பொருள் கொள்கலன் விடுவிப்பு தொடர்பான பிரச்சினையிலும் தலைவர் அவ்வாறே செயற்பட்டார்.
அன்று தொடக்கம் இன்றுவரை எமது தலைவரை பிரதமர் கடுமையாக விமர்சித்துவருகின்றார். அவரது நற்பெயருக்குத் களங்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிடுகின்றார்.
கொள்கலன் பிரச்சினை தொடர்பில் மக்களுக்குத் தெளிவு படுத்தாமல் பிதற்றுகிறார். பௌத்த குருமாரை நிந்திக்கின்றார்.
எனவே, எமது தலைவர் ஓமல்பே சோபித தேரரின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் விதத்திலான விமர்சனங்களை பிரதமர் வாபஸ் பெறவேண்டும்.
இல்லாவிட்டால் பிரதமருக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம்.
போதைவஸ்துக்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா ஊடாகத்தான் இலங்கைக்கு வருகிறது. இந்நாடுகளிலிருந்து இங்கு வருவோருக்கான விசா வழங்குவதில் தளர்வுகளை ஏற்படுத்தி இங்கு வந்த பின்னர் விசா பெறும் நடவடிக்கையால் தான் இந்நிலை உருவானது.
எனவே, மீண்டும் விசா வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கடுமையாக்க வேண்டும். போதைவஸ்துப் பழக்கம் இன்று பாடசாலை மாணவர்களிடமும் பரவி வருகிறது. கம்பஹா மாவட்டத்தில் பெருமளவான பாடசாலையில் மாணவர்கள் போதைவஸ்துப் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். இவ்வாறான நிலையில் எமது எதிர்காலம் என்னவாகும்? என்று கேள்வி எழுப்பினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply