ஜனாதிபதி அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை: சுமந்திரன்

வட மாகாண சபையின் சீரான நிர்வாகத்துக்கு உதவுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமக்கு உறுதியளித்திருந்தார். அதன் முதற்கட்டமாக வட மாகாண பிரதம செயலாளரை மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக கே.திருவாகரனை நியமிப்பதாகவும் எமக்கு உறுதியளித்தார். எனினும் இதுவரை இவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்தார்.வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடந்த 2 ஆம் திகதி காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சு நடத்தினர். இச்சந்திப்பில் வட மாகாண ஆளுநர் நீக்கப்பட வேண்டும், வட மாகாண பிரதம செயலாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது உட்பட சில முக்கிய விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தப் பேச்சுக்கள் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்
,

பேச்சுக்களின் போது வட மாகாண பிரதம செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்துவிட்டு கே.திருவாகரனை நியமிக்க ஜனாதிபதி உறுதியளித்தபோதும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் வட மாகாண ஆளுநரின் பதவிக் காலம் எதிர்வரும் ஜுனில் முடிவடைவதால் சிவில் அதிகாரி ஒருவரை நியமிப்பது குறித்து அதன் பின்னர் தீர்மானிக்கலாம் எனவும் இந்தப் பேச்சு வார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது என்றார்.

இதேவேளை, ஜனாதிபதியுடனான சந்திப்பை அடுத்து கருத்து வெளியிட்டிருந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண நிர்வாக விடயங்களில் காணப்படும் முட்டுக்கட்டைகள் தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாகவும் தமது கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்வதாகவும் ஜனாதிபதி கூறினார். அத்துடன் வட மாகாணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லையென்றும் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகள் இதுவரை முறையாக நிறைவேற்றப்படவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply